திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை
1 திமொத்தேயு (1 Timothy)
[தொகு]அதிகாரங்கள் 3 முதல் 4 வரை
அதிகாரம் 3
[தொகு]சபைக் கண்காணிப்பாளர் பண்புகள்
[தொகு]
1 சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிற எவரும்
மேன்மையானதொரு பணியை விரும்புகிறார்.
இக்கூற்று உண்மையானது.
2 ஆகவே, சபைக் கண்காணிப்பாளராக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராயும்
ஒரு மனைவி கொண்டவராயும், [1]
அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல்,
கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றை உடையவராயும் இருக்க வேண்டும்.
3 அவர் குடிவெறிக்கும் வன்முறைக்கும் இடங்கொடாது,
கனிந்த உள்ளத்தவராய் இருக்க வேண்டும்;
சண்டையையும் பொருளாசையையும் தவிர்ப்பவராக இருக்க வேண்டும்;
4 தமது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி,
தம் பிள்ளைகள் பணிவுடனும் மிகுந்த கண்ணியத்துடனும் வளர
ஆவன செய்பவராக இருக்க வேண்டும்.
5 தமது சொந்தக் குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால்,
கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்?
6 திருச்சபையில் புதிதாகச் சேர்ந்த ஒருவர் கண்காணிப்பாளராகக் கூடாது.
அவ்வாறு ஆவாரானால் அவர் தற்பெருமை கொள்ளலாம்.
அதனால் அலகைக்குக் கிடைத்த தண்டனையை அவர் அடைய நேரிடும்.
7 சபைக் கண்காணிப்பாளர் திருச்சபைக்கு வெளியே உள்ளவர்களிடமும்
நற்சான்று பெற்றவராயிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அவர் இழி சொல்லுக்கு ஆளாகலாம்;
அலகையின் கண்ணியிலும் விழ நேரிடலாம். [2]
திருத்தொண்டர்கள் பண்புகள்
[தொகு]
8 அவ்வாறே திருத்தொண்டர்களும் கண்ணியமுடையவர்களாக இருக்க வேண்டும்;
இரட்டை நாக்கு உள்ளவர்களாகவும்
குடிவெறிக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருத்தலாகாது. எச்சரிக்கை!
9 தூய மனச்சான்று உடையவர்களாய் விசுவாசத்தின் மறைபொருளைக் காத்து வர வேண்டும்.
10 முதலில் இவர்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
இவர்கள் குறையற்றவர்கள் எனக் காணப்பட்டால் திருப்பணியாற்றலாம்.
11 அதுபோலவே பெண்களும் கண்ணியமுடையவராயும் புறங்கூறாதவராயும்
அறிவுத்தெளிவு உடையவராயும் எல்லாவற்றிலும் நம்பத்தக்கவராயும் இருக்கவேண்டும்.
12 திருத்தொண்டர்கள் ஒரு மனைவி கொண்டவர்களாயும், [3]
பிள்ளைகளையும் சொந்தக் குடும்பத்தையும்
நல்ல முறையில் நடத்துகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
13 நன்கு திருத்தொண்டு ஆற்றுவோர் உயர் மதிப்புப் பெறுவர்.
இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையைக் குறித்து அதிகத் துணிவோடு பேசுவர்.
சமயத்தின் உயர்வான மறைஉண்மை
[தொகு]
14 நான் விரைவில் உன்னிடம் வருவேன் என்னும் எதிர்நோக்குடன் இவற்றை உனக்கு எழுதுகிறேன்.
15 நான் வரக் காலந்தாழ்த்தினால்,
நீ கடவுளின் வீட்டாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை
இத்திருமுகத்தின் வழியாகத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வீட்டாரே வாழும் கடவுளின் திருச்சபை;
இத்திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது.
16 நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமேயில்லை.
அது பின்வருமாறு:
"மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்;
தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்;
வானதூதருக்குத் தோன்றினார்.
பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்;
உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்;
மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்."
- குறிப்புகள்
[1] 3:2 - இதனை "ஒரேமுறை திருமணம் செய்தவராகவும்" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[2] 3:2-7 = தீத் 1:6-9.
[3] 3:12 - இதனை "ஒரேமுறை திருமணம் செய்தவராகவும்" எனவும் மொழிபெயர்க்கலாம்.
அதிகாரம் 4
[தொகு]4. திமொத்தேயுவின் பணி பற்றிய அறிவுரைகள்
[தொகு]விசுவாசத்தை விட்டு விலகுதல்
[தொகு]
1 தூய ஆவியார் தெளிவாய்க் கூறுகிறபடி,
இறுதிக் காலத்தில் சிலர் ஏமாற்றும் ஆவிகளுக்கும்
பேய்களின் போதனைகளுக்கும் செவிசாய்த்து,
விசுவாசத்தை விட்டு விலகிப் போவர்.
2 அலகைக்கு உரியவர் என்னும் குறியிடப்பட்ட மனச்சான்று உடைய
பொய்யர்களின் வெளி வேடத்தால் கவரப்படுவர்.
3 அந்தப் பொய்யர்கள் திருமணத்தைத் தடை செய்கிறார்கள்;
சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்;
ஆனால், உண்மையை அறிந்த விசுவாசிகள் நன்றியுணர்வுடன் பெற்று உண்பதற்கே
அந்த உணவுகளைக் கடவுள் படைத்துள்ளார்.
4 கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே.
நன்றி உணர்வுடன் ஏற்றுக் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை.
5 ஏனெனில் கடவுளின் வார்த்தையும் நமது மன்றாட்டும் அதைத் தூயதாக்கும்.
இயேசுவின் நல்ல தொண்டர்
[தொகு]
6 இவற்றைச் சகோதரர் சகோதரிகளுக்கு எடுத்துக் கூறினால்
நீ கிறிஸ்து இயேசுவின் நல்ல தொண்டனாய் இருப்பாய்.
நீ பின்பற்றி வருகிற விசுவாசக்கோட்பாடுகளாலும்
நற்போதனைகளாலும் வளர்ச்சி பெறுவாய்.
7 உலகப் போக்கிலான புனைகதைகளையும் பாட்டிக் கதைகளையும் விட்டுவிலகு.
இறைப்பற்றில் நீ வளரப் பயிற்சி செய்.
8 ஏனென்றால் உடற்பயிற்சி ஓரளவுதான் பயன் தரும்.
ஆனால், இறைப்பற்று எல்லா வகையிலும் பயன் தரும்.
இது இம்மையிலும் மறுமையிலும் நாம் வாழ்வு பெறுவோம்
என்னும் வாக்குறுதியைக் கொண்டுள்ளது.
9 இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
10 வாழும் கடவுளை எதிர்நோக்கி இருப்பதால்தான் நாம் வருந்தி உழைத்து வருகின்றோம்.
அவரே எல்லாருக்கும், சிறப்பாக நம்பிக்கை கொண்டோருக்கும் மீட்பர்.
11 இவற்றைக் கட்டளையாகக் கொடுத்துக் கற்பித்து வா.
12 நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்.
பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில்
நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு. [*]
13 நான் வரும்வரை விசுவாசிகளுக்கு மறைநூலைப் படித்துக் காட்டுவதிலும்
அறிவுரை வழங்குவதிலும் கற்பிப்பதிலும் கவனம் செலுத்து.
14 இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத்
திருப்பணியில் அமர்த்தியபோது
உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே.
15 இவை எல்லாவற்றிலும் கவனம் செலுத்து.
இவைகளிலேயே ஈடுபட்டிரு.
அப்போது நீ அடைந்துள்ள வளர்சி எல்லாருக்கும் தெளிவாகும்.
16 உன்னைப்பற்றியும், உன் போதனையைப் பற்றியும் கருத்தாயிரு;
அவைகளில் நிலைத்திரு;
இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்;
உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர்.
- குறிப்பு
[*] 4:12 = 1 கொரி 16:11.
(தொடர்ச்சி): திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை