பக்கம்:அண்ணா காவியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அண்ணா காவியம்


அடக்குமுறைக் காளாகிச் சிறைக்கோட் டத்துள்
அரியவுயிர் நீத்தனரே இருவீ ரர்கள்:

தடக்குன்றாம் நடராசன், தாள முத்து
தமிழ்ப்பயிர்தான் செழிப்பதற்கே எருவாய் ஆனார்!

இடக்குரைத்தார் இராசாசி முதல மைச்சர்:
எழுந்தனர்காண் இளந்தமிழர் சிங்கம் போலே!

முடக்குவாத இந்தியுமே வந்தாற் போல
மூலைக்குப் போனதன்றே; தமிழர் வென்றார்!



புத்துணர்ச்சி விதை தூவித் தமிழ கத்தில்
போராட்ட எண்ணத்தை வளர்த்து வந்த

சத்துநிறை தளபதியாய் அண்ணா ஆனார்!
தலைவரான பெரியாரும் மனம்ம கிழ்ந்து,

முத்துவிளை சிப்பியினைக் கண்டெ டுத்து
முக்காலம் உணர்ந்தவராய் நடக்க லானார்!

தத்துவமாய்த் 'தமிழ்நாடு தமிழர்க்' கென்னுந்
தகைமொழியை நாடெங்கும் பரப்பி வந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/60&oldid=1078739" இலிருந்து மீள்விக்கப்பட்டது