பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 121


வெளியே வந்ததும் அனிச்சையாக 'டாக்ஸி' என்று வாயில் வந்த வார்த்தையை விட்டுவிட, உடனே அருகிலேயே ஒரு டாக்ஸி வந்து நின்றதும் என்ன செய்வதென்று புரியாமல் கைகளை நெறித்தபோது பார்வை மூலமே பர்ஸை புரிந்துகொள்ளும் டிரைவர் வண்டியை இன்னொரு பக்கமாக நகர்த்தினார். பழைய ஆட்டோ ரிக்க்ஷா டிரைவர்கூட அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பிறகு தன்னையே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டார். 'அந்த அம்மாவா இருக்காது. அவங்க சிரிச்ச சிரிப்பென்ன, மங்கள லட்சுமி.மாதிரி பார்த்த பார்வை என்ன, இது ஏதோ ஏழைப்பொண்ணு! வரவர எனக்கு ஏன் கண் பார்வை குறையுது? புத்தி ஏன் பிசகுது: இந்தப் பொண்ணு அந்த அம்மாவா இருக்காது. இருக்கக்கூடாது!"

தூத்துக்குடி பஸ் நிலையத்தில் ஒரே கூட்டம் கட்ட பொம்மன் உட்பட, தனியார் பஸ்கள் வரை திருச்செந்தூர் டிக்கட்டுகளைத்தான் ஏற்றினார்களே தவிர, இடையேயுள்ள காயலையோ ஆத்தூரையோ கண்டுக்கவில்லை, திருவிழாக் கூட்டத்தில் இடையே உள்ள ஊர்கள் அவர்களைப் பொறுத்த அளவில் அன்றைக்கு இல்லை. இரண்டு மணி நேரம் கழித்து 'எப்படியோ வந்துட்டேன்' என்பதுபோல் வந்த டவுன் பஸ்ஸில் ஏறினாள்.

அவள் ஊருக்குள் வந்தபோது மாலை மயங்கிக் கொண்டிருந்தது. சூரியனை மலையென்னும் மலைப் பாம்பு கெளவிக் கொண்டிருந்தது போல் தோன்றியது. ஊருக்கு அகழிபோல் இருந்த ஒடைநீரைக் கடந்து, வாயில்புடவை பாதித் தலையை மறைக்க, கனமில்லாத சூட்கேஸ் வலதுகையைப் பிடித்திழுக்க, இடதுகை தலையில் குவிந்திருக்க, ஜனவாடை பட்ட முனைக்கு அவள் வந்தாள். தெருவோரத்தில் 'தெல்லாங் குச்சி' விளையாடிய பையன்கள், அவளை ஆச்சரியமாகப்