பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 ★ இல்லம்தோறும் இதயங்கள்


பார்த்துவிட்டு, "ஏய் அக்கா வந்துட்டா! மிட்டாய் கிடைக்குண்டா” என்று ஒரு காகம் இரையைக் கண்டதும், இதர காக்கைகளைக் கூப்பிடுவது போல, தொலைவில் 'பலீஞ் சடுகுடு விளையாடிய பயல்களைக் கூப்பிடுவது போல் கத்தினார்கள். "இந்தாங்கடா. இங்கயே வாங்கிக்கங்கடா..” என்று அன்று சொன்னவள், இன்று அவர்களைப் பாராததுபோல் ஒதுங்கிப் போனாள். திமிரைப் பாருன்னு பார்க்கிறவர்கள் சொல்வார்கள். சொன்னால் சொல்லிட்டுப் போகட்டும்!

பஞ்சாயத்து போட்ட புதிய குழாய்களில், பழைய' தண்ணீரைப் பிடித்துக்கொண்டு நின்ற பெண்களில் ஒருத்தி "என்னக்கா, காரு ஒடத்தண்ணில சிக்கி நின்னுட்டா?" என்று யதார்த்தமாகக் கேட்டபோது, அவள் அன்றைய யதார்த்தம் தாங்க முடியாதவளாய், கார் சிக்கல. நான்தான் சிக்கிட்டேன்' என்று தன்னளவில் சொல்லிக்கொண்டு அந்தப் பெண்களைப் பார்த்து, லேசாக சிரிக்க முடியாதபடி சிரித்து, வேகமாக நடந்தாள். எதிரே வெங்கடேசனின் அப்பா குமரேச மாமா வந்தார்.

அவர் அவளைப் பார்த்து, "எப்பம்மா வந்த ரயிலு லேட்டா வந்துதா? இல்ல, எங்கேயாவது விழுந்துட்டு வந்துதா? இப்பத்தான், நல்லா இருக்கதா நாம நினைக்கிற ரயிலும் தண்டவாளத்த விட்டு, தரையில ஒடுற காலமாச்சே!” என்று எதேச்சையாகக் கேட்டது இவளுக்கு அவர் தன்னை விழுந்துபோன ரயிலுக்கு ஒப்பிடுவதுபோல் பட்டது. அவரைப் பார்த்து விழித்துக் கொண்டே, அவருக்கு தன் நிலைமை புரியக்கூடாது என்பதுபோல், தனக்கே புரியாத ஒரு சில வார்த்தைகளைச் சேர்த்துக் குழப்பிப் பதிலாகச் சொல்லிவிட்டு, கிட்டத்தட்ட ஒடினாள். மீன்களைக் கூறுபோட்டு விற்கும் வீராசாமி, அதன் அருகிலேயே ஊரில் கிடைக்காத உருளைக்கிழங்கு, பீட்ரூட் கிழங்குகளை எடைபோட்டு விற்கும் மங்கம்மா