பக்கம்:ஈச்சம்பாய்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

93



சுந்தரத்திற்கு ஆவேசமே பயமானது. அவரது நண்பரான டெபுடி கமிஷனரின் உருவத்தை மனதில் நிறுத்திக் கொண்டார். அவருக்கும் தனக்கும் உள்ள உறவை பூதக்கண்ணாடிபோல் பெரிதாக்கிக் கொண்டார். தன் பக்கம் நியாயம் இருப்பதை நினைத்துக் கொண்டார். யாரிடம் போவது என்று கண்களைச் கழற்றினார். யாருமே அவரைக் கண்டுக்கவில்லை. அதட்டுவதைவிட மோசமான உதாசீனம். அதுவே அவமானமாகப்பட்டது. ஆனாலும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பார்த்தபோது... பழக்கமான ஒரு காக்கிச் சட்டை. விசாரணைக்கு என்று வந்து நூறு ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்ட சப் இன்ஸ்பெக்டரோ - ஏட்டோ. நாற்பது வயதுக்குள்ளேயே முகம் பழுத்த வீரர். அவருக்கு எதிரே எஸ் வடிவ நாற்காலியில், ஒரு கிடா மீசை மனிதர். பார்த்தால் பயம் வரும் தோற்றம். அதைப்பற்றிக் கவலைப்படாமலேயே ஒருத்தன் - அதுவும் கைலி கட்டிய ஆசாமி அட்டகாசமாக பேசுகிறான். வீரப்பா போல் சிரிக்கிறான். அவர் காதில் கிசு கிகக்கிறான்.

இன்ஸ்பெக்டர் நிமிர்ந்து பார்க்கிறார். சுந்தரத்தை முகத்தை ஆட்டிக் கூப்பிடுகிறார். அவர் வந்ததும் என்ன என்கிறார். இதற்குள் எதிர் நாற்காலியில் இருந்தவர் 'சார் சார் இவர்தான் உள்ள புடிச்சுப் போட்டிருக்கிறோமே... பாக்கியமுத்துப் பய... அவனோட முதலாளி.... உட்காருங்க சார்' என்கிறார். பிறகு இவரு நம்ம டிசி. சௌத்துக்கு வேண்டப்பட்டவர்' என்று கண்களைச் சிமிட்டுகிறார். உடனே, சொன்னவரின் அருகே உள்ள நாற்காலியில் இரண்டு கால்களையும் தூக்கிப் போட்டிருந்த இன்ஸ்பெக்டர், அந்தக் கால்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, சுந்தரத்தை கண்களால் உட்காரச் சொல்லுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/95&oldid=1371833" இலிருந்து மீள்விக்கப்பட்டது