பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

ஈரோடு மாவட்ட வரலாறு


நாட்டுக்காரர்களுக்கு வாய்ப்பளித்தனர். இதற்கு பக்கிங்ஹாம் கர்னாடிக் மில், ஹார்வி மில், கோவையில் ஸ்டேன்ஸ் மில் ஆகியவைகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

இங்கிலாந்து மன்னராட்சி

கிழக்கிந்தியக் கம்பெனியினர் இந்திய ஆட்சியை இங்கிலாந்து அரசுக்கு ஒப்படைத்துப் பல ஆண்டுகள் ஆகியும் பழைய நிலைமையே நீடித்தது. இந்தியர்களும் தொழில் தொடங்கப் படிபடியாக அனுமதிக்கப்பட்டனர். 1906ஆம் ஆண்டு கோயமுத்தூரில் முதன் முதலில் 'சோமசுந்தரா' மில் தொடங்கப்பட்டது.

1934ஆம் ஆண்டு 'பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்" என்ற இங்கிலாந்து கம்பெனிதான் முதலில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. சென்னை, திருச்சியிலுள்ள அக்கம்பெனிகளை 1938ல் தான் அரசு ஏற்றது. இவற்றில் முதன்மைப் பதவிகள் மழுவதும் ஆங்கிலேயருக்கே அன்று வழங்கப்பட்டன.

இந்தியாவின் இறக்குமதி, ஏற்றுமதி வணிகம் முழுவதையும் ஆங்கிலேயக் கம்பெனிகளே நடத்தின. அதை எதிர்த்தே வ.உ. சிதம்பரனார் “சுதேசி கப்பல் கம்பெனியைத்" தொடங்கி “கப்பலோட்டிய தமிழன்" என்ற பெயரைப் பெற்றார்.

அரசு நிறுவனங்கள்

கல்கத்தாவே இந்தியாவின் முக்கிய நகராக விளங்கியது. துறைமுக நகராகக் கல்கத்தா இருந்ததே அதற்குக் காரணம், 1908ஆம் ஆண்டு "தொழில் இயக்குநர் மற்றும் தொழில் நுட்ப விசாரணை" அலுவலர் (industrial Director and Technical Enquires} நியமிக்கப்பட்டார். எல்லா மாநிலப் பிரதிநிதிகளையும் அழைத்து அதே ஆண்டு ஒரு விரிவான ஆய்வு மாநாட்டை அவர் உதகமண்டலத்தில் நடத்தினார். எல்லா மாநிலங்களும் தொழில் தொடங்கத் தக்க அறிவுரைகளைக் கூறினார். 1914ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில் அரசின் சார்பில் தொழில்துறை (Department of Industry) ஏற்படுத்தப்பட்டது. தொழில் ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.