பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஈரோடு மாவட்ட வரலாறு


கொங்கணிவர்மன், முதலாம் மாதவன், அரிவர்மன், விஷ்ணு கோபன், இரண்டாம் மாதவன். கிருஷ்ண வர்மன். திண்டிகரன், இரண்டாம் கொங்கணிவர்மன், துர்விநீதன், புஷ்கரன், திரிவிக்கிரமன், பூவிக்கிரமன், மூன்றாம் கொங்கணிவர்மன், ராசகோவிந்தன், சிவ காமன், பிருதுவி கொங்கணி. முதலாம் இராசமல்லதேவன், கந்த தேவன், சத்திய வாக்கியன், குணதுத்துமன், இரண்டாம் இராசமல்ல தேவன் ஆகியோர் கங்க அரசர்கள் ஆவர்.

இவர்களுள் முதல் இரண்டு அரசர்கள் ஸ்கந்தபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டை ஆட்சிபுரிந்தனர், மற்றவர்கள் தளவனபுரம் என்ற தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர்.

கங்கமன்னர்கள் சிலரது பெயர்கள் கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும் இடம் பெற்றுள்ளன. துர்விநீதன் என்பதனை அவனிதன் என்ற பெயரோடு தொடர்புபடுத்துவர். துர்விநீதன் (கி.பி. 610-655) பெருங்கதையின் மூல நூலாகிய 'பிருகத் கதா'வை வட மொழியில் இயற்றியவன்.

விசயமங்கலம் சமணக்கோயில் கி.பி. 678ல் கட்டப்பட்டதாக மெக்கன்சியின் ஆவணம் கூறுகிறது. அது கங்கமன்னன் பூவிக்கிரமன் (665-680) காலமாக இருக்கலாம். சிலர் வைணவம், சைவம் சார்ந்திருந்தாலும் பலர் சமணத்துக்கு ஆதரவளித்தனர். இரட்டர் கங்கர் காலம் கி.பி. 250 முதல் கி.பி. 870 வரை எனலாம்.