பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

உலகப் பெரியார் காந்தி



மனிதருள் இருந்துகொண்டு, சமயம் கிடைக்கும்போதெல்லாம் வெளிவந்து வெறிச்செயல் புரியும் மிருகத்தை அடக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும், அகில உலமுகம் இந்த துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள புதிய நிலையைக் காப்பாற்ற, இந்த உறுதியைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏகாதிபத்தியக் கோட்டையைத் தகர்த்து, யுக யுகமாக மூடிக்கிடந்த ஆலயங்களைத் திறந்து, மக்களிடையே புதிய மாண்பைக் காண்பதற்குத் தளராமல் பாடுபட்டு வந்த புனித புருஷரை இழந்துவிட்டோம்--நமது வாழ்நாளிலே நேரிட்ட இந்த மகத்தான நஷ்டத்துக்கு, பலப்பல தலைமுறைகளுக்குப் பிறகும் ஈடு செய்யக் கூடிய நிலை வராது.

இந்து மதத்தில் ஏறிப்போய், ஊறிப்போய் இருந்த கேடுகளை எல்லாம். தமது பரிசுத்த வாழ்க்கையால் நீக்கும் காரியத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த அரும் பணியால். அன்பு மார்க்கம் தழைக்கும், அனைவரும் ஆண்டவனின் குமாரர்களே என்ற உண்மை துலங்கும் என்று மனமார நம்பினார் அந்தோ! இந்த அகத் தூய்மையோ புறத் தூய்மையோ. நெடுங்காலமாகக் குவிந்து வளர்ந்துபோயுள்ள மத வெறியர்களைத் திருத்தாதே, என்று கூறிவந்தோம்--அவர் யாரிடமிருந்து அன்பு மார்க்கத்தை எதிர்பார்த்தாரோ. அங்கிருந்தே அவர் உயிரைக் குடிக்கும் ஒரு வெறி பிடித்த இந்து கிளம்பினான். இவன் இந்து மார்க்கத்தையும், இந்து அரசையும் நிலைநாட்டும் நோக்கம் கொண்டவன் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் சமஸ்தான சத்தியாக்கிரகத்திலும் கலந்து கொண்டவனாம். பெயர் நாதுராம் விநாயக்கோட்சே உலகை நோக்கி நமது உள்ளத்தை நோக்கி, "உத்தமரை வீழ்த்திவிட்டான் ஓர் உலுத்தன். அவருடைய உடலை நாங்கள் இழந்துவிட்டோம்--அவருடைய உத்தமக் கொள்கைகளின் மூலம், அவர் இனி என்றென்றும் வாழ்வார். இந்தத் துக்க நாளன்று, அவர் எங்கள் ஒவ்வொருவருடனும் கலந்துவிட்டார் -- இனி அவரை எங்களை விட்டுப் பிரிக்க முடியாது.