பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

உலகப் பெரியார் காந்தி



நாட்டின் பிடியிலே சிக்கிவிட்டாலும், ஒருநாள், விடுதலை பெறுவோம் என்ற எண்ணம், கருகுவதில்லை.

விடுதலைப்போர் நடத்தப்படும் காலம், நாட்டின் வரலாற்றிலே சுவையுள்ள பகுதி வீரச்செயல்கள், தியாக நிகழ்ச்சிகள் நிரம்பிய பகுதி. குன்றுகள் கோட்டைகளாகி, வீதிகள் போர்முகாமாகி, வீடுகளெல்லாம் பாசறையாகி, நாட்டுமக்கள் வீரர்களாகும் வேளை அது. அப்போதெல்லாம் அவர்களின் ஒரே நோக்கம், ஒரே லட்சியம், தன்னாட்சி பெறுவது என்பது தான். தோட்டத்துக்குள்ளே புகுந்து புலியை விரட்டி அடித்துக் கொல்ல வேண்டுமென, தோட்டக்காரர் தன் துணைவருடன் கூடி ஆயுதமெடுத்து, புலி தப்பி ஓடாதபடி நாற்புறமும் நல்ல முறையில் காவல் அமைத்து, தீரமாக உள்ளே நுழைந்து புலியுடன் போராடுகிறபோது. எப்படியாவது இந்தப் புலியை அடித்துக் கொன்றுவிட்டால் போதும் என்ற ஒரே எண்ணம்தான் தோன்றும் புலி கொல்லப்பட்டதும், 'அப்பா! கொன்றுவிட்டோம் புலியை; இனிப் பயமில்லை" என்ற ஆறுதல் தோன்றும் ஆயாசமும் ஏற்படக்கூடும். அது போலவே பல்வேறு நாடுகளிலே, விடுதலைப்போர் நடந்த காலங்களிலெல்லாம், எப்படியாவது, நம்மை அடிமைப் படுத்திய அன்னிய ஆட்சியை ஒழித்து நாட்டிலே தன்னாட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே எண்ணம். ஒரே இலட்சியமே தலைசிறந்து விளங்கிற்று. அந்த ஒரே குறிக்கோளுடனேயே, மக்கள் வீரமாகப் பணியாற்றினர் அவர்களை நடத்திச்சென்ற தலைவர்களும் பல நாடுகளிலே விடுதலை வேட்கையை மட்டுமே, முக்கியமானதாக்கினர். பல நாடுகளிலே, விடுதலை கிட்டியதும், மக்கள், தமது நோக்கம் ஈடேறிவிட்டது; அன்னியன் விரட்டப்பட்டான். தாய் நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. சுதந்திரக்கொடி கெம்பீரமாகப் பறக்கிறது. ஆகவே, நமது வேலை முடிந்தது, இனிச் சொந்த வேலையைப் பார்ப்போம் என்று எண்ணி, அங்ஙனமே, பழையபடி "பிரஜைகள்" ஆகிவிடுவதே முறை எனக் கொண்டனர் - புலியைக் கொன்றான் பிறகு தோட்டக்காரன்.