பக்கம்:ஓங்குக உலகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ஓங்குக உலகம்


விலங்குகளிடம் அகப்பட்டு அல்லல் உற்று உழன்ற எனக்கு, அவையும் ஊறு செய்யுமோ என அச்சம் உண்டாயிற்று. மாநாட்டில் அவை ஏதேதோ பேசின; எனக்கு அவற்றின் மொழி புரியாவிட்டாலும் நிச்சயமாக அவை மொழிகள் பற்றிச் சண்டையிட்டு மடியவில்லை-மடியத் தயாராக இல்லை என்பது மட்டும் நன்கு விளங்கிற்று. அவை கூடிய மாநாட்டின் அடிப்படையும் அவற்றின் பேச்சுக்களின் சாரமும் ஒருவாறு விளங்கின-ஒருவேளை கனவிடையிலேயே இருந்திருப்பின் அவை இன்னும் நன்கு விளக்கம் பெற்றிருக்கும். எனினும் இந்த மனித வேறுபாட்டிற்கு இடையே நினைவுபெற்ற எனக்கு, அவற்றின் ஒருமை உணர்வு பற்றிய பேட்டிகள் முழுதும் நினைவில் இல்லை. ஒருசில உள்ளன. அவற்றை மட்டும் இங்கே கூற நினைக்கிறேன்.

விலங்கினங்களும் பறப்பனவும் ஊர்வனவும் பல லட்சக்கணக்கில் வேறுபட்டனவாயினும், அவை அனைத்தும் தோற்ற நாளில் ஒரே மூலக் கூறுபாட்டின் அடிப்படையில்-கூர்தல் அற நெறியில்-தோன்றின என்ற உண்மையை உணர்ந்து, அனைவரும் ஓரினம்-அனைத்தும் ஒரு குலம்-என்ற மெய்ம்மையாம் வாழ்க்கை வாழ வேண்டுமென மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றின. அதுபற்றிப் பேசிய பல-நடக்கும்-பறக்கும்-ஊரும் உயிர்கள் மனிதனைப்பற்றி-அடிக்கடி பேசிய சொற்கள் நினைவில் நின்றன.

மனிதனைப்போல மேடைமேல் பேசிவிட்டு வாழ்க்கையில் மறக்கக்கூடாது என்றும், ஒன்றிய சமுதாயம் என்று சொல்லிக்கொண்டே சாதி பற்றியும் சமயம் பற்றியும் நீதி பற்றியும் நிறம் பற்றியும் மொழி பற்றியும் புதுப்புதுக் காட்சிகளையும் சபைகளையும் நாடுகளையும் அமைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/13&oldid=1137756" இலிருந்து மீள்விக்கப்பட்டது