பக்கம்:ஓங்குக உலகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓங்குக உலகம்

11


கொண்டே சென்று படுகுழியில் விழக்கூடாது என்றும், புறத் தோற்றத்தாலும் உணவு, வாழ்வுமுறை முதலிய எல்லா வகைகளிலும் அவை வேறுபட்டவையாயினும் தோற்ற மூலக்கூறு ஒன்றேயாதலால் அந்த உடன் பிறப்பு உணர்விலேயே ஒன்றிவாழ்வதே தம் கடமை என்றும் அவை விளக்கிப் பேசின. அவற்றிற்கு உண்மையில் எந்த வேறுபாடும் இல்லையல்லவா! மேலும் தேவையற்றவற்றிற்கெல்லாம் சிறு சிறு சண்டைகளை உண்டாக்கி-பின் பெரும் போர் விளைக்க வித்திட்டு, அப்பெரும் போரில் உடன் பிறந்த மக்களையே கொன்றுகுவிக்க விதவிதமான குண்டுகள் செய்யும் அநாகரிக மனிதன், தம் இனத்திலிருந்து - விலங்கினத்திலிருந்து - பிறந்தானே என்று வருந்தி, அவ்வினத்தவன் திருந்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு ஒரு தீர்மானமும்-அவ்வாறே திருந்தாவிடின் தாமே இயற்கைச் சூழலை உருவாக்கிக் கொடுமை நிறை உலகாக இதை ஆக்குவதைக்காட்டிலும் இவ்வுலகையே அழிக்கத் திட்டமிட வேண்டுமென ஒரு தீர்மானமும் நிறைவேற்றின.

இவை போன்று இன்னும் எத்தனையோ தீர்மானங்களும் பேச்சுக்களும் கடைசியாக ‘கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றல் இன்றி நாட்டத்தில் கொள்ளவேண்டும்’ எனவும் அவ்வாறு கொள்ளாதவர் உயிரினத்திலிருந்தே ஒதுக்கப்படத்தக்கவர் எனவும் உணர்வுத் தீர்மானம் உருவாயிற்று. இவ்வாறு பல நினைவுக்கு வந்தன. எனினும் இவை அனைத்தும் கனவிடைக் கண்டன. ஆனால் அவை நனவிடைவரும்போது-அதுவும், உடன் பிறப்பால் ஒன்றியும் உளத்தால் மாறுபட்டும் வாழும் மனிதனோடு வாழும் நனவு உலகில் வரும்போது நமக்கும் அவற்றிற்கும் உள்ள தூரமும் வேறுபாடும் தோன்றாமல் போகுமா? ஆம்! மனித உணர்வோடு வாழவேண்டிய மனிதன் விலங்காகிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/14&oldid=1137758" இலிருந்து மீள்விக்கப்பட்டது