பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கபோதிபுரக்


காது என்று பரந்தாமன் எண்ணினான். ஆனால், சென்னையைப்போல கருணானந்தருக்கு ஆதரவு தந்த ஊரே இல்லையெனலாம். அவ்வளவு ஆதரவு தந்துவிட்டது சென்னை. சீமான்களெல்லாம் சீடர்களாயினர். மேனாட்டுப் படிப்பில் தேறியவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பத்திரிகைகாரர்கள் யாவரும் சீடர்களாயினர்.

கருணானந்தரின் தோழரொருவர், ஒரு பிரபல பத்திரிகையில் இருந்தார். அவர் யோகியின் குணாதியசங்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டார். அவருடைய ‘தத்துவமே’ உலகில் இனி ஓங்கி வளருமென்றார். அவர் சர்வமத சமாஜத்தை உண்டாக்குவார் என்று கூறினார்கள் பலர்.

அவருடைய கொள்கைக்கும் அரவிந்தர் கொள்கைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று வேறொருவர் கூறினார்.

மடத்தின் வாயிலில் மணி தவறாது மோட்டார்கள் வரும். விதவிதமான “சீமான்கள்” அவருடைய பக்தி மார்க்கத்தைக் கேட்டு ஆனந்திப்பர்.

பரந்தாமன் திடுக்கிட்டுப் போனான். சென்னையின் நாகரிகம் அதன் கட்டடங்களிலும், மக்கள் உணவிலும் உல்லாச வாழ்விலும் காணப்பட்டதேயன்றி, உள்ளத்திலே மிகமிகக் குருட்டுக் கொள்கைகளே இருப்பதைக் கண்டான். உலகை ஏமாற்றும் ஒரு வஞ்சகனிடம் ”வரம்” கேட்க பலர் வருவது கண்டு, சிந்தை மிக வெந்தான்.

ஆஹா! பகட்டு வேஷத்துக்குப் பாழும் உலகம் இப்படிப் பலியாகிச் சீரழிகிறதே என்று வாடினான். இனி இந்த வஞ்சக நாடகத்தில் தான் பங்குகொள்ளக் கூடாது என்று தீர்மானித்தான். நாள் முழுவதும் அத்தீர்மானம் வளர்ந்து வலுப்பட்டது. ஒருநாள் நடுநிசியில் பரந்தாமனின் உள்ளம் பதைபதைத்தது.