பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கபோதிபுரக்


ஒரு விபத்து எனக்கொண்டாள். ஆனால் அதனாலேயே தன் வாழ்க்கையில் இருந்து வந்த இன்ப ஊற்று உலர்ந்துவிட்டதாகக் கருத முடியவில்லை.

துக்கம் விசாரிக்க வந்தவர்களெல்லாம் தனக்கும் மாண்டு போன தன் கணவருக்கும் இருந்த பொருத்தம், ஒற்றுமை, நேசம் முதலியவற்றைப் பற்றிப் பேசினர். அது வாடிக்கையான பேச்சுதானே! யாருக்குத் தெரியும். தன் காதலனைக் காணப் போகவேண்டும் என்பதற்காகக் கணவனுக்கு அபின் ஊட்ட, அது அளவுக்கு மீறிப் போனதால் அவன் இறந்தான் என்ற உண்மை.

தன் கணவனைத் தானே கொன்றதை எண்ணும்போது சாரதாவுக்கு இருதயத்தில் ஈட்டிபாய்வது போலத்தான் இருந்தது. “நான் அவர் சற்று தூங்கவேண்டும் என்று அபின் கொடுத்தேனேயொழிய அவர் இறக்கவேண்டும் என்றா கொடுத்தேன். இல்லை! இல்லை! நான் எதைச் செய்தாலும் இப்படித்தானே ‘வம்பாக’ வந்து முடிகிறது. என் தலை எழுத்துப் போலும்” என்று கூறித் தன்னைத்தானே தேற்றிக்கெண்டாள்.

தன் வீட்டின் கடனைத் தீர்க்கத்தான், ராதாவின் தகப்பன் பணக்காரனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தார். வேதவல்லியும் தன் மகள் நல்ல நகை நட்டுடன் நாலுபேர் கண்களுக்கு அழகாக வாழவேண்டும் என்ற விருப்பத்துக்காகத்தான் சாரதாவை மணம் செய்ய ஒப்பினாள். ஆனால் அந்த மணம் மரணத்தைத்தான் சாரதாவுக்குத் தந்தது. என் செய்வது? ஓட்டைப் படகேறினால் கரையேறு முன்னம் கவிழ்ந்தாக வேண்டுமல்லவா! சாரதாவுக்கு அவள் பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கைப்படகு ஓட்டை உள்ளது. அதில் எத்தனை நாளைக்குச் செல்லமுடியும்.