பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நெருப்பு தனக்குள் வரும் பொருள்களை எரித்து, அவற்றின் பலத்தைக் கொண்டு, மேலும் உயரமாகக் கிளம்பி எரிகிறது. அதுபோல, ஆன்ம சக்தி உடையவர்கள், தங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாய் உள்ளவைகளையே தன் வளர்ச்சிக்குச் சாதனங்களாக்கிக் கொண்டு வளர்வார்கள். ஆன்ம சக்தி உள்ளவர்கள், அடிபடும் பந்து மேலெழுவதைப் போல், துன்பங்கள் சூழச் சூழ மேலெழுவார்கள்.

ஆன்ம சக்தி வளரக் கல்வி தேவை; ஆற்றல் தேவை; கலைஞானம் தேவை; அறிவு தேவை; பண்பு தேவை; சான்றாண்மை தேவை; ஒப்புரவுப் பண்பு தேவை. இவை யெல்லாவற்றையும் ஒருங்கே பெற்ற ஆன்மா ஆனந்தமாக வளரும்; வாழும்; வாழ வைக்கும். அதனால்தான் தம்மை உணர்ந்த நிலையிலேயே தலைவனாகிய கடவுளை உணரமுடியும் என்றனர் ஞானிகள்!

ஆன்மிகம் என்பது முற்றாகச் சமயமும் அல்ல; சமயம் சாராததும் அல்ல. ஆனால், ஆயிரத்தில் ஓரிருவர் கடவுள் பக்தியில்லாமலும், அறிவியல் மேதைகளாக, நல்லவர்களாக, சான்றோர்களாக, வையகத்தை வாழ்வித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலோரின் ஆன்ம வளர்ச் சிக்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாடும் ஒரு சாதனமாகும்.

கடவுள் வழிபாடு, பக்தி உடையவர்களில் பலர் ஆன்ம சக்தியே இல்லாதவர்களாக, கொடியவர்களாகக் கூட இருக்கிறார்கள். இவர்களுக்குக் கடவுள் பக்தி மனிதர்களுக்குத் தேவைப்படும் தண்ணீரைப் போல. மீனுக்குத் தேவைப்படும் தண்ணீரைப் போல, மனிதனுக்குக் கடவுள் பக்தி அமைய வேண்டும்.

ஆன்மாவின் தூய்மையே மனத் தூய்மை, மனத்தால் புலன்களும் அழுக்கற்றதாகும், புலன்களில் தூய்மை, பொறிகளில் துய்மை, இதுவே சீரான வளர்ச்சி. பொறிகளின் தூய்மையால், ஆன்மா தூய்மையடைதலும் உண்டு. ஆனால்