உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


வீட்டு நிலைக்கு வழி என்றனர். இன்பங் கருதி அன்றோ மாக்கள் கள்ளுண்டு புலாலுண்டனர். ஆகவே, புறத்தே இன்பம் நாடுதலை எல்லா வகையாலும் இழித்துரைத்தனர். அழகு வழிபாட்டிற்கு அவ்வகையில் அணைகோல வேண்டி நின்றது. துறவறமே பேரறமென்ற முழக்கம் எங்கும் பெரும் முழக்கமாயது. குருதியும், புலாலும், கள்ளும் அன்பு வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டன. நீரும் தூய நீராய்த் திரு நீராயிற்று. எங்கும் அன்பு மணம் கமழ்ந்தது. ஓரறிவுயிர்க்கும் ஊறுபாடு ஒன்றுமில்லாத வகையில் உவகை எங்கும் பொங்கியது. இந்தியா ஒன்றோ! சீனம், சாவகம், கடாரம், ஈழம் முதலான நாடுகளும் இப்பேராற்றில் குளித்துக் களித்தன. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி என்ற அரும் பெறன் மணிகளை இவ்வெள்ளப் பெருக்கே கொண்டுவந்து நம் நாட்டிற்கொழித்தது. பதினெண் கீழ்க்கணக்கில் பெரும்பகுதி இவ்வெள்ளத்து எழுந்த இன்னமுதாம். மக்களிடையே துன்பத்தை ஒழிக்கப் புகுந்தனர் பெரியோர் பலர். எந்நிலையினரிடையும் கல்வியைப் பரப்பினர். நோயொழிய மருந்தாராய்ச்சி செய்யும் மருத்துவப் பள்ளிகள் பல எழுந்தன. தூவுணவையே எவரும் உண்டனர். புலால் உண்போர் தீண்டப்படாதாராய் ஊர்ப் புறத்தே ஒதுக்கி வைக்கப்பட்டனர்.