உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


இன்னோரைச் சம்பந்தர் நகையாடுகின்றார். அவர்கள் பேசுந்தமிழோ, வடமொழிச்சொற்கள் நிறைந்தவை. இது போது ஆங்கிலம் படித்த சிறுவர் ஆங்கிலச் சொற்களை இடையிடையே பெய்து தமிழ் பேசுவது போல, வடமொழிச் சொற்களே நிறைந்து வரச் சிலர் தமிழ் பேசினர் போலும். சம்பந்தரோ, தம்மைத் 'தழிழ் ஞான சம்பந்தன்' என்றும் 'நற்றமிழ் ஞான சம்பந்தன்' என்றும் ‘செந்தமிழ் ஞான சம்பந்தன்’ என்றும் புனைந்துரைத்துக் கொள்வதில் பெருவிருப்புடையார். அது பற்றியன்றோ, இவரது திருக்கடைக் காப்பை நன்கு கற்றுணர்ந்த சங்கரரும் இவரைத் "தழிழ்க் குழவி" (திராவிட சிசு) என்றே போற்றுகின்றார். இறைவனும் தமிழின் இனிமையே பாடி ஆடுகின்றான் என்று செம்மாந்து பாடுகின்றார் சம்பந்தர்.

தமிழினீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல
முழவ மொந்தை மல்கு பாடல் செயற்கையிடமாவோர்
குமிழன் மேனி தந்து கோல நீர் மையது கொண்டார்
கமழுஞ் சோலைக் கானூர் மேய பவள வண்ணரே.

என்று பாடுதல் காண்க. அத்தகையார் தனித் தமிழே நாடுகின்றார். மறையவர் குடியிற் பிறந்தும் தனித் தமிழ்க்காக அந்நாளிலேயே போராடிய பெரியார், வடமொழி கலந்த தமிழை விரும்புவரோ? வடமொழியிலும் பிராகிருதத்திலும் கல்வெட்டுக்கள் எழுதப் பெற்ற காலத்தில் தமிழில் எழுதும் முயற்சி தொடங்கியது சம்பந்தர் போன்றார் முயற்சியால் எனலாம்.