உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


அந்தாதி முதலியவற்றில் குறிக்கப்பட்ட கதைகளையும் ஒரு கோவை செய்து பாடிப் புனைந் துரைக்கின்றார். திருஞான சம்பந்தர் புராணத்தில் கண்ட கழுவேற்றிய கதையை மட்டும் இங்கு எழுதுவோமாக: நம்பியாண்டார் நம்பியைப் பின்பற்றி எழுதினாலும், கதை எவ்வளவு மாறிவிட்டது என்பதை உற்று நோக்குக.

ஆளுடைய அரசும், ஆளுடைய பிள்ளையாரும் திருமறைக் காடு வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பாண்டி நாட்டில் சமணரே எங்கும் ஆயினர். நெறிதவறி நடந்த அவர்களால் நாடு கலங்கியது. அரசனும் தீவினைப் பயனாலே, அந்நெறியே சார்ந்தான். பறிமயிர்த்தலையும், பாயும், பீலியும், தடுக்கும், மேனிலாச் சொரியும் முக்குடையும் ஆகித் திரிபவரே எங்கும் ஆயினர். பாண்டியனுக்கு ஓர் உய்வழியாகச் சோழனின் செல்வப் பெண்ணாம் மங்கையர்க்கரசியார் பாண்டியன் மனைவி ஆயினர். குலச்சிறையார் அமைச்சர் ஆயினர். பாண்டி நாட்டில் இந்த இருவரே சிவனை வழிபடுபவராய் எஞ்சி நின்றார்கள். ஆனால், இவர்களும் பாண்டியன் அறியாத வகையில்தான், சிவனை வழிபட்டு வந்தனர்; செந்நெறி விளக்கும் ஞான சம்பந்தப் பிள்ளையார், திருமறைக்காடு சேர்ந்தமையைத் தம் நல்வினைப் பயத்தாற் கேள்விப்பட்டனர்; மகிழ்ச்சி பொங்கியவர்களாய்த் தம் பாண்டிநாடு சமணப் பாழியாய் அழிவதை அப்பெரியாருக்கு அறிவுறுத்த ஆட்களை அனுப்பினர். அவர்களும், அருமறைத் தலைவனார் அங்கு