பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சிறுமியின் சிரிப்பு
   அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்றுகொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம்கூடத் தோன்றும்!
    அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக் குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய் கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.
    சிறிதுநேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும்போது சிப்பாய் முன் போலவே மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போதும் அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சலைக்காமல் செய்தான்.
   கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்துவிட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே, அடே, நான் வைத்திருக்கிறேனே சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!” என்று வியப்போடு கூறினாள்.

இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

15