பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில்தான் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்துகொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாளை. உடனே கடைவீதிக்குச் சென்றாள். ‘மிகவும் விலையுயர்ந்த-மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள்' என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடிசூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதனாள். மங்கலான சிவப்பு ரிப்பனுல் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, ‘அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது’ என்று எழுதிக் கொடுத்தாள்.

    அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத்தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டுவிழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டாள்.

இன்று அவள் இங்கிலாந்தின் அரசியாக-- இரண்டாவது எலிசபெத் ராணியாக விளங்குகின்றாள்!

16