பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

செந்தமிழ் பெட்டகம்

அவருள் இரண்டாம் பத்தால் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும், மூன்றாம் பத்தால் அவன் தம்பி பல் யானைச் செல்கெழுகுட்டுவனும், நான்காம் பத்தால் இமயவரம்பன் மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும், ஐந்தாம் பத்தால் அவன் தம்பி கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனும், ஆறாம்பத்தால் அக்குட்டுவனுக்குப்,பின்னவனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் பாடப்படுகின்றனர் இவ் ஐவரும் சேரர் குடியில் உதியஞ்சேரல் என்பவன் வழிவந்தவர்கள் ஏனை மூன்று பத்துக்களும் இரும்பொறையென்ற சேரர் குடியில் வந்த அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கு மகனான செல்வக்கடுங்கோ வாழியாதன், அவன் மகன் தகடு ரெறிந்த பெருஞ் சேரலிரும்பொறை, அவனுக்குப்பின் தோன்றிய குட்டுவன் இரும்பொறையின் மகன் குடக்கோ இளஞ்சேரலிரும் பொறை என்ற மூவரையும் முறையே பாடியுள்ளன இரண்டாம் பத்து முதலாகக் கிடைத்துள்ள இவற்றை முறையே குமட்டுர்க் கண்ணனார், பாலைக்கோதமனார், காப்பியாற்றுக் காப்பியனார், பரணர், காக்கை பாடினியார், நச்செள்ளையார் என்னும் அம்மையார், கபிலர் அரிசில்கிழார், பெருங்குன்றுார்கிழார் எனப் புலவர் எண்ம்ர் பாடியிருக்கின்றனர்

மேலைக் கடற்கரையிலுள்ள தீவுகளில் இருந்து கொண்டு கடலில் செல்லும் கலங்களைத் தாக்கிக் கடற் குறும்பு செய்துவந்த கடம்பர்களைச் சேர மன்னர்களில் இமயவரம்பனும், அவன் மகன் கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனும் வென்றெடுக்கிய செய்திகளும், மேலைக்கடற்கரையில் ஏழில்மலைப்பகுதியிலிருந்து ஆட்சி செய்த நன்னன் முதலிய குறுநிலத் தலைவர்களைச்’ சேரவேந்தர் வென்று மேம்பட்ட திறங்களும், தகடூர் நாட்டையாண்ட அதியர்களை வென்ற திறமும் பிறவும் இந்நூலிற் காணப்படும் வரலாற்றுச் செய்திகளாகும்

இனி, மேற்குமலை தொடரில் உள்ள நேரிமலை, அயிரைமலை, செருப்பு மலை முதலிய மலைகளும்,