பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

269

தோழியுடன் ஒருநாள் உபவனத்திற்கு மலர் கொய்யச் சென்றபோது, மணி மேகலா தெய்வத்தால் மணி பல்லவம் என்ற தீவிற்குச் சென்று புத்த பாத பீடிகையை வணங்கினாள், அதனால் முற்பிறப்பை யுணர்ந்தாள், அங்குக் கோமுகி யென்னும் பொய்கையில் ஆபுத்திரனால் விடப்பட்டிருந்த அமுதசுரபி யென்னும் பாத்திரத்தைத் தீவதிலகை யென்னும் தெய்வத்தின் வாயிலாகப் பெற்றாள்

மணிமேகலா தெய்வம் அங்குத் தோன்றிக் கற்பித்த மந்திரங்களின் உதவியால் வான் வழியே காவிரிப் பூம்பட்டினத்தை யடைந்து, உலகவறவி யென்னும் இடத்தில் பசித்தோர்க்கு அமுத சுரபியின் மூலம் உணவளித்து வந்தாள் இவளை நெருங்கிக் காதல் கொண்டு உரையாடிக் கொண்டிருந்த, சோழன் மகன் ஒரு கந்தருவனால் இறந்தான் அதனால் சோழன் இவளைச் சிறையிட்டான் அங்கும் சிறையிலிருந்தோர் பசியை அமுதசுரபியால் தணித்து வந்தாள் சோழன் மனைவி இவளுக்குத் தீமை பல செய்தாள் அவளுக்கு இவள் அறிவுரை கூறி, விடுதலைபெற்று, அறவண அடிகள் என்னும் முனிவரின் கட்டளைப்படியே, புண்ணியராசனாகப் பிறந்து அரசாட்சி செய்து கொண்டிருந்த ஆபுத்திரனை அவன் நாட்டிற்குச் சென்று கண்டு, அவன் பழம்பிறப்பை உணர்த்தி, மணி பல்லவத்திற்குச் சென்று, அவன் முற்பிறப்பின் என்புக் கூட்டைக் காட்டினாள் பிறகு வஞ்சிமாநகர் சென்று கண்ணகி கோயிலிற் கண்ணகியை வணங்கினாள் எல்லாச் சமயவாதி களிடமும் சமய நெறிகளைக் கேட்டாள் காஞ்சிநகர் சென்று, அங்கு வந்திருந்த அறவண அடிகளிடம் பெளத்த தருமங் கேட்டுப் பெளத்த நெறியை மேற்கொண்டாள்

சாத்தனார் மணிமேகலையின் கதையைக் கூறுகின்ற முறையிலேயே பெளத்த மதக் கருத்துகளைப் பல வழியாலும் எடுத்துச் சொல்லிப் பெளத்த மதத்தைப்