பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

37



அல்லது உடைமைகளைப் பறிகொடுத்தவன் என்றாவது ஒரு நாள் தன் முன்னைய பிழைகளுக்கு அறியாமைக்கு அல்லது இழப்புக்கு எண்ணி வருந்தவே செய்வான். அழவும் செய்வான். அவ்வாறு பிறர் அழும்படிக்கு அவர்களை வருத்தி அல்லது ஏமாற்றிச் சேர்ப்பவனது பொருள்கள் அனைத்தும், பின்னொரு நாளில் இவன் வருந்தும்படி, அழும்படி விட்டுவிட்டு இவன்பாலிருந்து வெளியேறி விடும் என்றும் அறத்தின் வழி - உலக இயற்கைக் கோட்பாட்டின் வழி எச்சரிக்கை செய்கிறார். அக்குறள் இது.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை

(659)

4. ஏமாற்றுதல் கூடாது

நல்ல செயல்களைச் செய்பவன் தொடக்கத்தில் கையிலுள்ள பலவற்றை இழப்பினும், பின்னர் கட்டாயம் அவன் மேற்கொள்ளும் நல்ல செயல்கள் நல்ல பயனையே தரும் என்று, நல்ல வினைகளை மேற்கொண்டு துன்புறுகிறவர்களுக்கு இக்குறளில் உறுதி கூறுகின்றார். 'பொய்யால், ஏமாற்றால் பொருளைச் செய்பவர்கள், பசுமண் கலத்தினால் தண்ணிரைத் தேக்கி வைப்பவர்களைப் போன்றவர்கள். விரைவில் அத்தண்ணிரும் இல்லாமற் போகும். அம் மண்பாண்டமும் கரைந்து அழிவுற்றுப் போகும். அப்படியே அவன் சேர்த்த பொருளும் அழியும். பொருளைத் தேடித் தர இவன் மேற்கொண்ட தொழிலும் அழிந்து போகும் என்று எவ்வளவு பொருள் பொதிந்த உவமையைக் காட்டி எச்சரிக்கிறார் பாருங்கள்.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று

(660)

5. செய்யத் தக்கனவும் செய்யத்தகாதனவும்

எனவே, இதிலிருந்து நாம் பொருளை ஈட்டுதற்கு என்று, நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைச் செய்யக்கூடாது. அத்தகைய செயல்களைச் செய்வதற்கு ஒரு நல்வாய்ப்பு ஏற்பட்டாலும் அதைத் தவிர்த்து விடுதல் வேண்டும் என்று கண்டோம் நமக்கு ஒரு தொகுப்பான உண்மை இப்பொழுது தெரிய வருகிறது. அஃது, உலகில் நாம் எந்தச் செயலையும் செய்வதற்கான செயல்திறம், பொருள்வலி, ஆள்வலி இவற்றைப் பெற்றிருந்தாலும், நாம் நமக்குரிய அல்லது ஏற்ற செயல்களிலேயே ஈடுபாடு காட்டி, அவற்றையே செய்வதற்கு முயலுதல் வேண்டும் என்பது. உலகில் நாம் எப்படியும் வாழ்ந்துவிட முடியாது. அது கூடவும் கூடாது. பறவைகளும் விலங்குகளும் கூட தமக்குப் பொருந்தாத செயல்களைச் செய்வதில்லை. ஒரு மாடு ஒரு நாயின் வேலையைச் செய்யாது. ஒருதுக்கணாங்குருவி ஒரு காக்கையைப் போல் கூடு கட்டி வாழ விரும்புவதில்லை. ஒரு தேனி தன் தேன் திரட்டும் வேலையை எப்பொழுதும் எந்தச் சூழலிலும் தவிர்ப்பதில்லை. அல்லது