பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
33

வும் வந்து ஜாதி முறையை நிலை நிறுத்துவதில் என்ன பங்கெடுத்துக் கொண்டார், என்று நமக்கு யாருக்கும் தெரியவில்லை.(சிரிப்பு)

அப்படியிருக்க, இன்று ஜாதி ஒழிப்புப் பேரால், காந்தி அடிகள்

பட எரிப்பு நடத்தவேண்டும் என்று பெரியார் கோருகிறார். ஜாதி முறை நீடிப்பதற்கான பழியை இன்று காந்தி அடிகள் மீது சுமத்துகிறார்.

அன்று காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்றது

ஒரு நாக்கு. இன்று அதே காந்தியின் படத்தை எரிக்க வேண்டுமென்கிறது வேறொரு நாக்கு, இந்த இரண்டு பேச்சுக்கும் இடையில் காந்தி அடிகள் நம் மத்தியில் இல்லவும் இல்லை. பணிவுடன் கேட்கிறேன், ஈ.வெ. ரா. வுக்கு இரண்டு நாக்கா என்று.

காந்தியடிகள் மறைந்தபொழுது அந்த மறைவில் உணர்ச்சி

வசப்பட்டு நின்ற கோடிக்கணக்கான மக்களை திருப்திப்படுத்தி பெருமை அடித்துக் கொள்ள அன்று காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கூறினாரா, அல்லது எதார்த்தத்தில் காந்தியைப் பெருமைப்படுத்தக் கூறினாரா?

இதை நீங்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால், ஈ.வெ.ரா

மாறி மாறிப் பேசுவதிலும், முன்னுக்குப் பின் முரணாகச் செயல் புரிவதிலும் உள்ள உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இதிருக்கட்டும்! காந்தி பட எரிப்பால், ஜாதி ஒழிப்பை வெற்றிப்படுத்த முடியுமா? முடியவே முடியாது. ஏன்?
காந்தி அடிகளின் கருத்தோட்டத்தை ஒத்துக் கொள்கிறவரும்

சரி ஒத்துக்கொள்ளாதவரும் சரி, இந்தியா முழுவதிலும் தமிழ் நாடு உட்பட, இந்த நூற்றாண்டில் அவருக்கு நிகரான பெரியார் வாழ்ந்ததில்லையென்று கருதுகிறார்கள். இந்த நாடு முழுவதிலும் பெருவாரியான மக்கள் அவரை 'தேசப் பிதா' என்று பேரன்போடும் பெரு மரியாதையோடும் அவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். இவர்களெல்லாம் ஜாதி நீடூழி வாழவேண்டும் என்று பிடிவாதம் காட்டுகிற பத்தாம்பசலி வைதீகர்கள் அல்ல, கம்யூனிஸ்டுகளை விட்டுவிடுங்கள், சோஷலிஸ்டுகள், பிரஜா-சோஷலிஸ்டுகள், தமிழரசுக் கழகத்தார், ஜனநாயக காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் காந்தீய வாதிகள், பூதான இயக்கத்தார், சர்வோதய வாதிகள்,---இவர்களெல்லாம்---காந்தியத்தை மதிக்கிறவர்கள் என்பது மட்டுமல்ல, ஜாதி ஒழிப்பிலும் கூட்டணியாக முன்வரக் கூடியவர்கள்.

காந்தி பட எரிப்பு நடவடிக்கை மேற்கூறிய அத்தனைப்

பேருடைய எதிர்ப்பையும் கொண்டுவரும் என்று நான் கூறத் தேவை இல்லை.