பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

எருமைகளின் காலில் மிதிபட்டு மடிகிறது. கி. பி. 1820- இல் உதகமண்டலத்தில் வாழ்ந்த சல்லிவன் என்ற ஐரோப்பியர் இப்பழக்கத்தை கைவிடுமாறு தோடர்களுக்கு அறிவுறுத்தினார். கி. பி. 1856-ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தின் தண்டலராக இருந்தவர் ஒரு புதிய சட்டம் இயற்றினார். அதன்படி தோடர் வீட்டில் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோர் கொண்டுவந்து ஆண்டுதோறும் நேரில் காட்டினால், அதன் வளர்ச்சிக்காகக் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுப்பதாகக் கூறினார். இப்பொழுதுகூட இச் சட்டம் அமுலில் உள்ளது. இதனால் பெண் குழந்தைக் கொலைச் செயல் ஓரளவு குறைந்ததெனலாம். ஆனால் முழுதும் நீங்கவில்லை. தோடர்களின் இச்செயலால் பெண்கள் தொகை ஆண்களின் தொகையைவிட எப் பொழுதும் குறைந்தே காணப்படுகிறது.

உதகமண்டலத்திற் கருகில் வாழும் தோடர்குல மகளிர் காதற் செயல்களில் கைதேர்ந்தவர்கள். நகரில் வாழும் மற்ற இன ஆண்களோடு கொண்ட தொடர்பால், ஓரளவு அவர்கள் மக்கள் தொகை அதிகரித்தது எனலாம். ஆனால் அப்படிப் பிறக்கும் குழந்தைகள் தோடர்களின் உடற்பண்புகளையே பெற்றிருக்கின்றன. வேற்று இனப் பண்புகளைப் பெற்றுப் பிறக்கும் குழந்தைகள் மிகவும் குறைவு.

பல கணவர் முறையும் பொது மனைவி முறையும் :

தோடர்களின் காதல் வாழ்க்கையும், இல்லறமும் சுவையானவை, கற்பைப்பற்றி அவர்கள் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. கலாசார வரலாற்றின்படி, கற்பு முறையானது, காலத்திற்குக் காலம் நாட்டுக்கு நாடு மாறுபட்டுக்கொண்டு வந்திருக்கிறது. ஒரு நாட்டுக் கற்புமுறை, மற்றொரு நாட்டினருக்கு புதுமையாகத் தோன்றும். பண்படாத மக்களினத்திலும் கற்பைக் காண முடியாது; எல்லோரும் கல்வி கற்று அறிவு

கு.வ-10