பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

வழங்கும் வழக்கால் கால் கொள்ளலாயிற்று எனலாம். அதன் பின்னர் இஸ்லாமிய நெறி அண்ணல் நபிகள் நாயகம் வாயிலாக இஸ்லாமிய இறையடியார்கள் மார்க்க ஞானச் செல்வர்கள் மூலமாக, உலகெங்கும் பரவியது போன்றே தமிழகத்திலும் பரவத் தொடங்கிற்று. இஸ் லாமிய நெறி வயப்பட்ட தமிழறிஞர்கள் தாங்கள் உணர்ந்து தெளிந்த உண்மைகளை தமிழறிந்த மக்களிடையே எடுத்துரைக்க தமிழ் மொழியை நேரிடையாகக் கையாள முனைந்தனர். இம்முனைப்பு தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழர் வாழ்வியல் உயர்வுக்கும் மாபெரும் உந்து சக்தியாக அமைந்ததெனலாம்.

காலத்தால் பிற்பட்டதாக இஸ்லாமிய நெறி தமிழகம் வந்தபோதிலும், அதன் தமிழ்ப் பணியைப் பொறுத்தவரை மற்ற சமயத்தவர் தமிழ்த் தொண்டிற்குச் சற்றும் சளைக்காத இன்னும் சொல்லப் போனால் பிற சமயத் தமிழ்ப் புலவர்களையும் விஞ்சும் வகையில் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழ்த் தொண்டாற்றியிருப்பவர்கள் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் என்பது தமிழ் வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.

குறிப்பாக, பதினாறாம் நூற்றாண்டளவில் ஆதரிப்பாரற்ற தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கைப் போக்கும். சிந்தனையோட்டமும் தடம் புரண்டு தடுமாறும் நிலைக்கு ஆளாயிற்று. சிந்தனைத் திறத்தோடும் கற்பனை வளத் தோடும் சிறந்த கருத்துக்களை உள்ளடக்கி 'இப்பாடலை இயற்றியிருக்கிறேன். பரிசுகொடு' என மிடுக்கோடும் பெருமிதத்தோடும் கேட்கும் நிலை போய் எதைப் பாடினால் பரிசு கிடைக்குமோ அதைப் பாடிப் பரிசில் பெற்று வயிறு வளர்க்கும் நிலைக்குப் புலவர் உலகம் ஆட்பட்டு, தரம் தாழ்ந்து வந்த, இடரான கால கட்டத்தில் எழுத்தாணி ஏந்தி இலக்கியம் படைக்க முனைந்தார்கள் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.