பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தமிழ்ப் பழமொழிகள்


கோவில் கொள்ளைக்காரன் குருக்களுக்குத் தட்சினை கொடுப்பானா?

கோவில் சோற்றுக்குக் குமட்டின தேவடியாள் காடிச் சோற்றுக்குக் கரணம் போடுகின்றாள். 10035


கோவில் தாசிக்குச் சதிர் ஆடக் கற்றுக் கொடுத்தது போல.

கோவில்பட்டியை விட்ட குதிரை கோபால சமுத்திரம் போனவுடன் துள்ளிக் குதித்ததாம்.

கோவில் பூனைக்குப் பயம் ஏன்?

கோவில் பூனை தேவர்க்கு அஞ்சாது.

கோவில் மணி போனால் நம்பியானுக்கு என்ன? 10040


கோவில் மணியம் என்று கூப்பிட்டால் போதும்.

கோவில் மணியம் என்று பேர் இருந்தால் போதும்.

கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா?

கோவில் மதில்மேலே தேள் கொட்டிற்றாம்; குருக்களகத்து ஞானாம்பாளுக்கு நெறி கட்டிற்றாம்.

கோவில் விளக்குக் கோடி புண்ணியம். 10045


கோவில் விளங்கக் குடி விளங்கும்.

கோவிலில் கொட்டு முழக்கு; கடையில் பாக்கு வெற்றிலை.

கோவிலில் வைத்துக் கும்பிட வேண்டும்.

கோவிலிலே பூஜித்துக் குளத்திலே கை அலம்பிக் கோபுர வாசலிலே உறங்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் போலே.

கோவிலுக்கும் முட்டும்; குபேரனுக்கும் கை சளைக்கும். 10050


கோவிலை அடைத்துக் கொள்ளை அடிப்பவனா குருக்களுக்குத் தட்சிணை கொடுப்பான்?

கோவிலைக் கட்டி நாயைக் காவல் வைத்தாற் போல.

கோவிலை நம்பிக் குயவன் பிழைக்கிறது போல.

கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொட்டைப் பார்த்துக் கும்பிடுகிறதா?

கோவிலையும் குளத்தையும் அடுத்து இருக்க வேண்டும். 10055


கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.

கோவூரான் அவிசாரி போகக் குன்றத்தூரான் தண்டம் கொடுக்க.

(ஊர்மேல் போக.)

கோவூருக்கு வழி எது என்றால் கன்று என்னுடையது என்றானாம்.

கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?

(அடிக்க.)

கோழி அடை வைக்குமுன்னே குஞ்சுகளை எண்ணலாமா? 10060