பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

மக்சீம் கார்க்கி


“தோழர்களே!” என்று அந்தக் கூட்டத்தினரின் கர்ஜனைக் கிடையிலே குறுக்கிட்டு அமைதியாகச் சொன்னான் அந்திரேய்; “தோழர்களே! இன்று ஒரு புதிய கடவுளின் பேரால் அறிவும் ஒளியும் தரும் புதிய ஆண்டவனின் பேரால், சத்தியமும் நன்மையுமே உருவான சாமியின் பேரால் நாம் ஒரு அறப்போர் தொடங்கியிருக்கிறோம். நமது இறுதி லட்சியம் வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால் நமக்குக் கிடைக்கவிருக்கும் முள் கிரீடமோ [1] கையெட்டுத் தூரத்தில்தான் இருக்கிறது. சத்தியத்தின் வெற்றியில், உண்மையின் வெற்றியில் எவருக்கேனும் நம்பிக்கை குறைவாயிருந்தால், இந்தச் சத்தியத்துக்காகத் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணம் செய்ய எவருக்கேனும் தைரியம் அற்றிருந்தால், தன்னுடைய சுய பலத்திலேயே எவருக்கேனும் அவநம்பிக்கையிருந்தால், துன்பத்தைக் கண்டு எவரேனும் அஞ்சினால், தயை செய்து அவர்கள் ஒருபுறமாக ஒதுங்கி நிற்கட்டும். நமது வெற்றியிலே நம்பிக்கை கொள்பவர்களை மட்டுமே நாம் கேட்டுக் கொள்கிறோம். அறைகூவல் விடுக்கிறோம். எங்களது லட்சியத்தைக் காண முடியாதவர்களுக்கு எங்களோடு அணிவகுத்து முன்னேறுவதற்கும் உரிமை கிடையாது. ஏனெனில் அப்படிப்பட்டவர்களுக்குப் பின்னால் துயரம்தான் காத்து நிற்கும். எங்களது அணி வகுப்பில் சேருங்கள். தோழர்களே! சுதந்திர மக்களின் விழா நாள் நீடூழி வாழ்க! மே தினம் நீடூழி வாழ்க!”

கூட்டம் மேலும் அதிகரித்துக் குழுமியது. பாவெல் கொடியைத் தூக்கிப் பிடித்தான். அவன் அதை உயரத் தூக்கியவாறு முன்னேறிச் சென்ற போது அந்தக் கொடியில் சூரிய ஒளிபட்டுப் பிரகாசித்தது: அந்தக் கொடி உவகையும் ஒளியும் நிறைந்து புன்னகை செய்தது.

பியோதர் மாசின் பாட ஆரம்பித்தான்;
போதும், போதும்! நேற்றையுலகின்
பொய்மை தன்னைப் போக்கவே....

பல்வேறு குரல்கள் அவனோடு சேர்ந்து, அந்தப் பாட்டின் அடுத்த அடியைப் பாடின;

பாத மண்ணை உதறித் தள்ளிப்
படையில் சேர வருகுவீர்!


  1. கிறிஸ்துவுக்கு முள் கீரிடம் சூட்டப்பட்டது. இங்கு உவமையாகக் கையாளப்படுகிறது - மொ-ர்.