பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

235


தாய் மாசினுக்குப் பின்னால் நடந்து வந்தாள். அவளது உதடுகளில் உவகை நிறைந்த புன்னகை பளிச்சிட்டது. அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் தன் மகனின் தலையையும், கொடியையும் அவள் மிகவும் சிரமப்பட்டு ஏறிட்டுப் பார்த்தாள். அவளைச் சுற்றி எங்குப் பார்த்தாலும் மகிழ்ச்சி நிறைந்த முகங்களும் பிரகாசமான கண்களுமே தெரிந்தன: அந்த முகங்களுக்கும் கண்களுக்கும் முன்னால் அவளது மகன் பாவெலும் அந்திரேயும் முன்னேறிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் பாடிக்கொண்டே செல்வதை அவளால் கேட்க முடிந்தது. அந்திரேயின் இனிமையான குரல் பாவெலது கனத்த குரலோடு கலந்து கொண்டிருந்தது;

பட்டினியும் பசியுமாகப்
      பாடுபடும் தோழர்காள்!
துயில் கலைந்து அணியில் சேர
      விரைந்து வாரும் தோழர்காள்!

மக்கள் அந்தச் செங்கொடியை நோக்கி விரைந்தோடி வந்தார்கள், ஓடி வரும்போதே அவர்கள் உற்சாகத்தோடு சத்தமிட்டார்கள், பின்னர் அவர்களும் அந்தப் பாட்டை உரத்தக் குரலில் பாட ஆரம்பித்தார்கள், எந்தப் பாடலை அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்குள் வெளிக்குத் தெரியாமல் பாடிவந்தார்களோ, அதே பாடல் இன்று தெருவில் எந்தவிதத் தங்குத் தடையுமற்று, பிரம்மாண்டமான அசுர வேகத்தோடு பொங்கிப் பிரவகித்து ஒலித்தது, கட்டுப்படுத்த முடியாத துணிவாற்றலோடு ஒலித்து விம்மியது. மேலும் அந்தப் பாடல் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் நெடிய பாதையில் வந்து கூடும்படி மக்களை அறைகூவி அழைத்தது. அந்தப் பாதை எவ்வளவு கரடுமுரடான பாதையென்பதையும், அவர்களுக்கு வெளிப்படையாகச் சொல்லியது. அந்தப் பாடலின் நிதானமான செந்தழல் உறுத்து ஒபாகி உதவாக்கரையான சகலவற்றையும், அழுகி இறுகி அடைந்துபோன சம்பிரதாய உணர்ச்சிகளின் குப்பை கூளங்களையும், மக்களின் மனத்திலே ஊடாடும் புதியதின் பயபீதியையும் பற்றிப் பிடித்து, அவற்றைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பொசுக்கித் தள்ளியது.

பயமும் மகிழ்ச்சியும் கலந்த ஏதோ ஒரு முகம் திடீரென்று தாயின் அருகே வந்து எட்டிப் பார்த்தது. பிறகு நடுநடுங்கி உடைத்துப்போன குரலில் கேட்டது:

“மீத்யா! நீ எங்கே போகிறாய்?”