பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

மக்சீம் கார்க்கி


பட்சிணிப் பறவையின் அலகைப்போல் இருந்தது. தனது பழைய சிவப்பு நிறத்தை இழந்து கரிபடிந்துபோன அவனது திறந்த சட்டைக்காலர், அவனது தோள்பட்டை எலும்புகளையும், மார்வில் மண்டி வளர்ந்திருந்த தடித்த கருமயிர்ச் சுருள்களையும் திறந்து காட்டிக்கொண்டிருந்தது. மொத்தத்தில் அவனது தோற்றத்தில் என்னவோ ஒரு சவக்களை படிந்துபோயிருப்பதுபோல் தோன்றியது. கொதித்துச் சிவந்த கண்கள் அவனது கரிய முகத்தில் கோபாக் கினி ஒளி வீசக் கனன்றுகொண்டிருந்தது. சோபியா முகம் வெளுத்துப்போய்ப் பேசாது உட்கார்ந்திருந்தாள். தன் கண்களை அந்த முஜீக்குகளிடமிருந்து அகற்ற முடியாமல் அப்படியே இருந்தாள். இக்நாத் தலையை அசைத்தான், கண்களை நெரித்துச் சுருக்கிட்டிபார்த்தான்; யாகவ் மீண்டும் அந்தக் குடிசை நிழலில் ஒதுங்கி, அங்கு நாட்டப்பட்டிருந்த குடிசைக் கால்களின் மரப்பட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உரித்துக்கொண்டு நின்றான். எபீம் அந்த மேஜையருகே செல்வதும் வருவதுமாக, தாய்க்குப் பின்னால் மெதுவாக உலாவினான். ரீபின் மேலும் பேசத்தொடங்கினான்:

“கொஞ்ச நாட்களுக்கு முன்னால், இந்த ஜில்லா அதிகாரி என்னைக் கூப்பிட்டு அனுப்பி: ‘டேய் அயோக்கியப் பயலே! மத குருவிடம் என்ன சொன்னாய்?’ என்ற கேட்டார். ‘நீங்கள் என்னை எப்படி அயோக்கியப் பயலே என்று கூப்பிடலாம்? நான் என் நெற்றி வியர்வையைச் சிந்தி, உழைத்துப் பிழைக்கிறேன். நான் யாருக்கும் எந்தக் கெடுதியும் செய்வதில்லை’ என்று சொன்னேன் நான். உடனே அவர் என்னை நோக்கிக் கர்ஜித்துப் பாய்ந்தார். என் தாடையில் அறைந்தார்; என்னை மூன்று நாட்களுக்குச் சிறையில் போட்டு வைத்தார். ‘சரிதான், நீங்கள் ஜனங்களிடம் இப்படித்தான் பேசுவீர்கள் போலிருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டேன் நான். “நாங்கள் இதை மறந்துவிடுவோம் என்று எதிர்பாராதே, கிழட்டு ஜென்மமே! நான் இல்லாவிட்டால், வேறொருவன், உன்னிடமில்லாவிட்டால் உன் குழந்தைகளிடம் இந்த அவமானத்திற்காக வஞ்சம் தீர்த்துக்கொள்வோம்; அது மட்டும் ஞாபகமிருக்கட்டும்! நீங்கள் உங்களது இரும்பாலான கோர நகங்களால் மக்களது மார்பகங்களை உழுது பிளந்தீர்கள், அங்கு பகைமையை விதைத்தீர்கள், எனவே பகைமைக்குப் பகைமைதான் பயிராக விளையும். எங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள், பிசாசுகளே!’ என்று நான் மனத்துக்குள் கூறிக்கொண்டேன். ஆமாம்!”

அவனது முகம் சிவந்துபோயிற்று; ஆக்ரோஷம் அவனுள்ளே கொதித்துப் பொங்கியது. அவனது குரலில் தொனித்த ஏற்றயிறக்கங்கள் தாயைப் பயப்படும்படி செய்தன.