பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

297


“ஆனால், நான் அந்த மத குருவிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?” என்று மேலும் தொடர்ந்தான் ரீபின். “அவர் கிராமத்தில் கூட்டம் முடிந்து திரும்பி வந்து. ஓரிடத்தில் அமர்ந்து சில முஜீக்குகளோடு பேசிக்கொண்டிருந்தார். என்ன பேசினார்? சாதாரண மக்களெல்லாம் ஆட்டு மந்தைகள்தாம் என்றும், அவர்களைக் கட்டி மேய்க்க ஒரு இடையன் எப்போதும் தேவையென்றும் அவர் பேசினார். ஹும்! எனவே நானும் வேடிக்கையாகச் சொன்னேன். ‘வாஸ்தவம்தான். நரிக்கு நாட்டாண்மை கொடுத்துவிட்டால், காட்டில் வெறும் இறகுகள்தான் மிஞ்சும். பறவைகள் மிஞ்சாது!’ என்றேன். அவர் தம் தலையைச் சாய்த்துக்கொண்டு. என்னைப் பார்த்தார். ஜனங்கள் எப்போதும் கஷ்டப்படவே வேண்டியிருக்குமென்றும், எனவே தமது வாழ்க்கையில் நேரும் துன்பங்களையும் சோதனைகளையும் சங்கடங்களையும் பொறுமையோடு தாங்கிக் கொள்வதற்குரிய சக்தியை அருளுமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார், எனவே நானும் ஜனங்கள் எவ்வளவோ காலமாய்ப் பிரார்த்தித்துக் கொண்டுதானிருக்கிறார்களென்றும், ஆனால், கடவுளுக்கு ரொம் ரொம்ப வேலையிருப்பதால், இந்தப் பிரார்த்தனைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க இயலவில்லையென்றும் சொன்னேன். ஹும் அப்புறம் அவர் என்னைப் பார்த்து: ‘நீ எந்த மாதிரிப் பிரார்த்திக்கிறாய்’ என்று கேட்டார். நான் சொன்னேன். ‘எல்லாச் சனங்களையும்போல் நானும் ஒரே ஒரு பிரார்த்தனையைத்தான் என் வாழ்நாள் முழுதும் சொல்லி வருகிறேன்; ‘கருணையுள்ள கடவுளே! எங்களுக்குக் கல்லைத் தின்று வாழவும், கனவான்களுக்காக விறகு பிளக்கவும் செங்கல் சுமக்கவும் கற்றுக்கொடு', என்றுதான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னேன், ஆனால், அவரோ என் பேச்சை முடிக்கவிடவில்லை.” திடீரென்று பின் சோபியாவின் பக்கம் திரும்பினான்; “நீங்கள் ஒரு சீமான் வீட்டுப் பிறவியா?” என்றான்.

“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?” என்று வியப்போடு திடுக்கிட்டுக் கேட்டாள் சோபியா.

“ஏனா?” என்று சிணுங்கிக்கொண்டான் ரீபின். “ஏனென்றால் நீங்கள் அப்படிப்பட்ட குடும்பத்தில்தான் பிறந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். எவரெவர் எப்படியெப்படிப் பிறந்தார்களோ அப்படித்தான் அவர்கள் விதியும் இருக்கும். ஹும், நீங்கள் தலையில் கட்டியிருக்கிறீர்களே அந்தத் துணியினால் சீமான்களின் பாபக் கறையையெல்லாம் மூடி மறைத்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா? ஒரு சாக்குக்குள்ளே போட்டுக் கட்டியிருந்தாலும் நாங்கள் ஒரு