பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

313


அரவமே இல்லாமல் ஒரு விறகுக்கட்டையை எடுத்து நெருப்பில் மெதுவாகப் போடுவான். உடனே தீப்பொறிகள் தெறித்துச் சிதறும்; புகைச்சுழல் மண்டியெழும்பும். உடனே அவன் தன் கைகளை வீசி அந்தத் தீப்பொறிகளை விலக்குவான்; அந்தப் பெண்கள் பக்கமாகப் புகை மண்டாதபடி விசிறிவிடுவான்.

இடையிலே யாகவ் எழுந்திருந்து அமைதியாகச் சொன்னான்:

“கொஞ்ச நேரம் பேச்சை நிறுத்தி வையுங்கள்.”

இப்படிக் கூறிவிட்டு அவன் வீட்டுக்குள்ளே ஓடிப்போய் சில துணி மணிகளைக் கொண்டு வந்தான்; பிறகு அவனும் இக்நாதுமாக, அந்தத் துணிகளைத் தங்கள் விருந்தாளிகளின் தோள்மீதும் கால்மீதும் போர்த்தி மூடினார்கள். பிறகு சோபியா மீண்டும் பேசத் தொடங்கினாள். தங்களது வெற்றி தினத்தைப் பற்றிய நினைவுச் சித்திரத்தை வருணித்தாள், தமது சொந்த பலத்தின்மீது அவர்கள் நம்பிக்கை விசுவாசம்கொள்ளும்படி தூண்டிவிட்டாள்: உண்டு கொழுத்து மதர்த்துப்போன உதவாக்கரை மனிதர்களின் முட்டாள்தனமான நப்பாசைகளையெல்லாம் பூர்த்தி செய்து வைப்பதற்காக, தங்களது உழைப்பையும் வாழ்வையும் விழலுக்கு இறைத்துக்கொண்டிருக்கும் உலக மக்களோடு, இவர்களும் ஒன்று கலந்து ஏகத்தன்மை பெற வேண்டும் என்ற அந்தரங்க உணர்ச்சியைக் கிளறித் தூண்டிவிட்டாள். சோபியாவின் வார்த்தைகளால் தாய் உணர்ச்சிவசப்பட்டு விடவில்லை. ஆனால், அவள் சொல்லிய விவரங்களால் அவர்கள் அனைவரது உள்ளத்திலும் எழும்பிய ஆழ்ந்த உணர்ச்சி தாயின் உள்ளத்திலும் நிறைவைப் பொழிந்தது; அன்றாட உழைப்பினால் அடிமைப்பட்டுத் தளையிட்டுக்கிடக்கும் மக்களுக்கு நேர்மையான சிந்தனையையும், சத்தியத்தையும், அன்பையும் பரிசாகக் கொண்டுவந்து தர வேண்டும் என்ற காரணத்துக்காக, தங்களது வாழ்க்கையையே துயரத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கி அர்ப்பணித்தவர்களின்மீது ஒரு மனப்பூர்வமான நன்றியுணர்ச்சி அவள் உள்ளத்திலே நிரம்பி நின்றது.

“கடவுள் அவர்களுக்கு அருள் செய்யட்டும்” என்று தன் கண்களை மூடித் தனக்குள்ளாகச் சிந்தித்துக்கொண்டாள் தாய்.

அருணோதயப் பொழுதில்தான் களைத்து ஓய்ந்துபோன சோபியா தன் பேச்சை நிறுத்தினாள். நிறுத்திவிட்டு, தன்னைச் சுற்றி சிந்தனையும் பிரகாசமும் தோன்றும் முகங்களோடு இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.

“நாம் புறப்படுவதற்கு நேரமாகிவிட்டது” என்றாள் தாய்.