பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

மக்சீம் கார்க்கி


“ஆமாம்” என்றாள் சோபியா.

அந்த இளைஞர்களில் ஒருவன் உரத்துப் பெருமூச்செறிந்தான்.

“நீங்கள் போவது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது” ‘என்று வழக்கத்துக்கு மாறான மெல்லிய குரலில் சொன்னான் ரீபின்; “நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள். அது ஒரு பெரிய விஷயம்—மக்களுக்கு ஒருமையுணர்ச்சியை ஊட்டுவது பெரிய விஷயம்! லட்சோபலட்சமான மக்களும் நாம் என்ன விரும்புகிறோமோ, அதையே விரும்புகிறார்கள் என்பதை அறிய நேரும்போது. அந்த உணர்ச்சி நம் இதயத்தில் அன்புணர்ச்சியே ஒரு மாபெரும் சக்திதான்!”

“ஆமாம். நீ அன்பு செய். அவன் உன் கழுத்தை வெட்டட்டும்” என்று கூறிச் சிரித்துக்கொண்டே எழுந்தான் எபீம். “சரி, மிகயீல் மாமா, யார் கண்ணிலும் படுவதற்கு முன்பே இவர்கள் போய்விடுவதுதான் நல்லது. அப்புறம் நாம் இந்தப் பிரசுரங்களைப் பரப்பிவிடத் தொடங்கியவுடனேயே அதிகாரிகள் இவற்றைக்கொண்டு வந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முனைவார்கள். ‘இங்கே வந்தார்களே, அந்த இரு யாத்திரிகர்கள், ஞாபகமிருக்கிறதா?’ என்று பிறகு யாராவது கண்டவர்கள் சொல்லித் தொலைக்கப் போகிறார்கள்....”

“அம்மா, நீ எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு நன்றி” என்றான் ரீபின். “உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பாவெலைப் பற்றியே ஞாபகம் வருகிறது; நீ எவ்வளவு நல்ல சேவை செய்கிறாய்!”

இப்போது ரீபின் சாந்த குணத்தோடு இருந்தான், மனம்விட்டுப் புன்னகை புரிந்தான். காற்று குளிர்ந்து வீசியது. இருந்தாலும், அவன் கோட்டுக்கூடப் போடாமல், சட்டையைக்கூடப் பொத்தானிட்டு மூடாமல், திறந்த மார்போடு நின்றான். அவனது பெரிய தோற்றத்தைப் பார்த்தவாறே தாய் அன்போடு கூறினாள்:

“நீ உன் உடம்பில் ஏதாவது போர்த்திக்கொள். ஒரே குளிராயிருக்கிறது.”

“என் நெஞ்சுக்குள்ளே நெருப்பு எரிகிறதே” என்றான் அவன்.

அந்த மூன்று இளைஞர்களும் நெருப்பைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்; அவர்களது காலடியிலே அந்த நோயாளி கம்பளிக் கோட்டினால் போர்த்தப்பட்டுக் கிடந்தான். வானம் வெளிறிட்டது. இருட்படலம் விலகிக் கரைந்தது. சூரியனின் வரவை நோக்கி இலைகள் படபடத்தன.

“நல்லது. நாம் விடைபெற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்று கூறிக்கொண்டே தன் கரத்தை சோபியாவிடம் நீட்டினான் ரீபின். “சரி, நகரில் உங்களை எங்கு கண்டுபிடிப்பது?”