பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

484

மக்சீம் கார்க்கி


“இதையா விசாரணை என்கிறீர்கள்?”

“அவர்களுக்கு வேணும்” என்று அதை ஆமோதித்து ரகசியமாகக் கூறினான் சிஸோவ்.

இப்போது வேறொரு வக்கீல் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஏளனபாவத்தோடு துடிப்பாகத் தோன்றும் வெளுத்த முகம்கொண்ட குட்டை ஆசாமி, அவரது பேச்சில் நீதிபதிகள் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசினார்கள்.

அரசாங்க வக்கீல் கோபத்தோடு துள்ளி எழுந்து, ஏதோ ஒரு நியாய ஒழுங்கைச் சுட்டிக் காட்டினார். உடனே அந்த ஆட்சேபணையைக் கிழ நீதிபதி ஏற்றுக்கொண்டார், பிரதிவாதித் தரப்பு வக்கீல் அவர் கூறியதைத் தலைவணங்கி மரியாதையோடு கேட்டுக்கொண்டு, தமது பேச்சை மேலும் தொடங்கினார்.

“விடாதே, அடி முடி காணும்வரையிலும் விடாதே!:” என்று சொன்னான் சிஸோவ்.

அந்த அறை முழுவதும் ஒரு புத்துணர்ச்சி பரவிக் கல கலத்தது. குத்தலான வார்த்தைகளால் அந்த வக்கீல் அந்த நீதிபதிகளின் தடித்த உணர்ச்சிகளைக் கிளறிவிட்டபோது, ஜனக் கூட்டத்திடையே ஓர் ஆக்கிரமிப்புச் சக்தி கட்டிழந்து பரவுவதுபோல் தோன்றியது. நீதிபதிகள் ஒருவருக்கொருவர் நெருங்கிக்கொண்டு, அந்த வக்கீலின் வாசகத்தால் தமக்கு ஏற்படும் வேதனை உணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு உம்மென்று முறைத்துக்கொண்டிருந்தார்கள்.

பாவெல் எழுந்திருந்தான். திடீரென அந்த அறை முழுவதிலும் அமைதி நிலவியது. தாய் தன் உடம்பை முன்னால் தள்ளிக்கொண்டு பார்த்தாள், பாவெல் மிகுந்த அமைதியோடு பேசத் தொடங்கினான்.

“கட்சியின் அங்கத்தினன் என்ற முறையில், நான் என் கட்சியின் தீர்ப்பைத்தான் அங்கீகரிக்கிறேன். எனவே என் குற்றமின்மையைப் பற்றி எதுவுமே பேசத் தயாராயில்லை. ஆனால், என் தோழர்களின் வேண்டுகோளுக்காக. என்னைப்போலவே தங்கள் சார்பிலும் வாதாட மறுத்துவிட்ட தோழர்களின் வேண்டுகோளுக்காக. நீங்கள் புரிந்துகொள்ளாத சில விஷயங்களை நான் விளக்கிச் சொல்ல முயல்கிறேன். சோஷல் — டெமாக்ரஸி என்ற பெயரால் எங்கள் இயக்கம் ஆட்சி அதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறது என அரசாங்க வக்கீல் குறிப்பிட்டார். நாங்கள் அனைவருமே ஜார் அரசனைக் கவிழ்க்க முயலும் கூட்டத்தார் என்றே அவர் எங்களைப்பற்றி எப்போதும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் உங்களுக்கு நான் ஒரு