பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

485


விஷயத்தைத் தெளிவாக்கிவிட வேண்டும். மன்னராட்சி ஒன்றே ஒன்று மட்டும்தான் நமது நாட்டினைப் பிணைத்துக் கட்டியிருக்கும் விலங்கு என்று நாங்கள் கருதவில்லை. ஆனால், அதுதான் முதல் விலங்கு; அதுதான் நம் கைக்கு விரைவில் எட்டக்கூடிய விலங்கு; அந்த விலங்கைத் தறிந்து மக்களை விடுவிக்க வேண்டியது எங்கள் கடமை!”

அவனது உறுதிவாய்ந்த குரலின் ஓங்காரத்தால் அந்த அறையின் அமைதி மேலும் அழுத்தமாகத் தோன்றியது. அந்த அறையின் சுவர்களே பின்வாங்கி விசாலம் அடைவது போலத் தோன்றியது. உயர்ந்ததொரு இடத்துக்குச் சென்றுவிட்டவனைப்போல் பாவெல் காட்சி அளித்தான்.

நீதிபதிகளின் நிலை கொள்ளாமல் தவித்துத் தத்தளித்துத் தமது ஆசனங்களில் நெளிந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பிரபு வம்சத் தலைவர், உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் நீதிபதியிடம் ஏதோ ரகசியமாகச் சொன்னார். அதைக் கேட்டு, அந்த நீதிபதி தலையை ஆட்டிவிட்டு, பிரதம நீதிபதியிடம் ஏதோ சொன்னார். அவருக்கு அடுத்தாற்போலிருந்த சீக்காளி நீதிபதி அவரது இன்னொரு காதில் ஏதோ ஓதினார். அந்தக் கிழ நீதிபதி வலது இடதுபுறமாக அசைந்துகொண்டே பாவெலின் பக்கமாகத் திரும்பி ஏதோ சொன்னார். ஆனால் அவரது வார்த்தைகளைப் பாவெலின் நிதானமான ஆற்றொழுக்குப் பேச்சு அமிழ்த்தி விழுங்கிவிட்டது.

“நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனி நபர் சொத்துரிமைக்கு சொத்துரிமையின் பேரால் மக்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, மக்களை ஒருவருக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு. தமது நல் உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும் சமுதாய அமைப்புக்கு — நாங்கள் எதிரிகள், இந்தச் சொத்துரிமைச் சமுதாய அமைப்பு இந்த வெறுப்புணர்ச்சியை மூடி மறைப்பதற்காக, அல்லது அதை ஏற்றுக்கொள்வதற்காக, பொய்மைக்கும், புனை சுருட்டுக்கும் ஆளாகி, மக்கள் அனைவரையும் பொய்களுக்கும், மாய்மாலத்துக்கும், தீய கிரியைகளுக்கும் ஆளாக்கிவிடுகிறது. தான் செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காக, மனிதப் பிறவியை. ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணும் சமுதாயத்தை நாங்கள் மனிதத் தன்மையற்றதாக, எங்களது நல உரிமைகளின் எதிரியாகக் கருதுகிறோம். அந்தச் சமுதாயத்தின் பொய்யான, இரண்டுபட்ட ஒழுக்க நெறியை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. தனி மனிதனிடம் அந்தச் சமுதாயம் காட்டும் குரூரத்தையும் வக்கிரபுத்தியையும் நாங்கள் வெறுத்துத் தள்ளுகிறோம். அந்த மாதிரியான சமுதாய அமைப்பு தனி மனிதனின் உடலின்மீதும்