பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

509


"நல்லது போய்வாருங்கள். மூன்று அல்லது நாலு மாசம். மிஞ்சிப்போனால் ஆறு மாசம். அதற்கு மேல் போகாது என நம்புகிறேன். ஆறு மாதங்கள்! வாழ்க்கையில் அது ஒரு பெரும் பகுதிதான்! சரி. ஜாக்கிரதையாக இருங்கள். சரி, கடைசி முறையாக நாம் தழுவிக் கொள்வோம்.

ஒல்லியாய் மெலிந்த தனது உறுதி வாய்ந்த கரங்களை அவள்மீது இங்கிதத்தோடு மெதுவாகப் போட்டு அவளது கண்களையே பார்த்தான் அவன்.

“உங்கள் மீது நான் காதல் கொண்டுவிட்டேன் போலிருக்கிறது” என்று கூறிச் சிரித்தான். “அதனால்தான் இப்படித் தழுவுகின்றேன்......”

அவள் அவனது நெற்றியையும் கன்னங்களையும் ஒன்றும் பேசாது முத்தமிட்டாள். ஆனால் அவளது கைகள் மட்டும் நடுநடுங்கின. அவன் அதைக் கண்டுவிடக் கூடாது என்பதற்காக, அவள்கைகளைச் சட்டென்று விலக்கிக்கொண்டாள்.

“நாளைக்கு ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். காலையிலே ஒரு சிறுவனை அனுப்புங்கள். அந்த மாதிரிச் சிறுவன் லுத்மீலாவிடம் இருக்கிறான். அவன் நான் இருக்கிறேனா போய்விட்டேனா என்று பார்த்துவிட்டு வந்து சொல்வான். சரி, போய் வாருங்கள். தோழர்களே, எல்லாம் நல்லபடியாக நடக்கும்.”

அவர்கள் வீட்டை விட்டு வெளியேறித் தெருவுக்குள் வந்ததும் சாஷா அமைதியோடு கூறினாள்:

“அவன் சாகப் போவதென்றாலும்கூட, இப்படித்தான், இதே அவசரத்தோடுதான் நடந்து கொள்வான், அவனை மரணமே எதிர்நோக்கி வரும்போதுகூட, அவன் தன் கண்ணாடியைச் சரி செய்து பார்த்துக்கொண்டே ‘அபாரம்’ என்று கூறிக்கொண்டே சாகத் துணிவான்.”

“நான் அவனை நேசிக்கிறேன்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

“நான் அவனை நேசிக்கவில்லை. ஆனால் அவனைக் கண்டு வியக்கிறேன். அவனைப் பிரமாதமாக மதிக்கிறேன். அவன் சில சமயங்களில் அன்போடும் ஆதரவோடும் இருக்கத்தான் செய்கிறான். இருந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு வறட்சி காணப்படுகிறது. அவன் போதுமான அளவுக்கு மனிதத் தன்மை பெற்றவனாக இல்லை....... சரி. நம்மைப் பின்தொடர்ந்து ஆட்கள் வருவதாகத் தெரிகிறது. நாம் இருவரும் ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து போவதே மேல். யாராவது