பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

510

மக்சீம் கார்க்கி


பின்தொடர்வதாகத் தெரிந்தால், லுத்மீலாவின் இருப்பிடத்துக்குப் போகாதீர்கள்.”

“போவேனா?” என்று அதை ஆமோதித்தாள் தாய். சாஷாவோ தான் கூறியதையே மீண்டும் அழுத்திக் கூறினாள்.

“போகவே போகாதீர்கள். என் இடத்துக்கு வந்துவிடுங்கள். சரி. நாம் தற்போதைக்குப் பிரிந்துவிடலாம்.”

அவள் விறுட்டெனத் திரும்பி, வந்தவழியே நடக்க ஆரம்பித்தாள்.

28

சில நிமிஷ நேரம் கழிந்த பின்னர், தாய் லுத்மீலாவின் சிறிய அறைக்கு வந்து, அங்கிருந்த அடுப்பருகிலே குளிர் காய்ந்து கொண்டிருந்தாள். லுத்மீலா கறுப்பு உடை அணிந்திருந்தாள்; இடையிலே ஒரு தோல் பெல்ட் கட்டியிருந்தாள். அவள் அந்த அறைக்குள்ளே மேலும் கீழும் மெதுவாக நடந்துகொண்டிருந்தாள். உடையின் சரசரப்பும் அவளது கம்பீரமான குரலும் அந்த அறையில் நிரம்பியொலித்தன.

அடுப்பிலிருந்த தீ பொரிந்து வெடித்துக் காற்றை உள்வாங்கி இரைந்துகொண்டிருந்தது. அதே வேளையில் அவளது குரல் நிதானமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

“ஜனங்கள் கொடியவர்களாயிருப்பதைவிட முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது கண்முன்னால் உள்ள விஷயங்களைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்; அதைத்தான் உடனே புரிந்துகொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் கையெட்டும் தூரத்திலுள்ள எல்லாம் மலிவானவை. சாதாரணமானவை, தூரத்தில் உள்ளவைதான் அருமையானவை, அபூர்வமானவை. அந்தத் தூரத் தொலை விஷயத்தை நாம் எட்டிப் பிடித்துவிட்டால், வாழ்க்கையே மாறிப் போய் மக்களுக்கு அறிவும் சுகமும் கிட்டுமானால், அதுவே எல்லோருக்கும் ஆனந்தம்: அதுவே சுகம். ஆனால் அந்த வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகியே தீரவேண்டும்.”

திடீரென்று அவள் தாயின் முன்னால் வந்து நின்றாள்.

“நான் ஜனங்களை அதிகம் சந்திப்பதில்லை. யாராவது என்னைப் பார்க்க வந்தால், உடனே நான் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிடுவேன். வேடிக்கையாயில்லை?” என்றுதான் ஏதோ மன்னிப்புக் கோருவதைப் போலக் கூறினாள் அவள்.

“ஏன்?” என்றாள் தாய். அந்தப் பெண் அவளது அச்சுகேவலைகளை எங்கு வைத்துச் செய்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினாள் தாய்.