பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

திருக்குறள்



உறவினர் போன்றும் நெருங்கிய நண்பர் போன்றும் இருந்து கொண்டே இருக்கும் பகைவருக்காகவே அவன் அஞ்சுதல் வேண்டும் என்பது கருத்து. 882

3.உட்பகை அஞ்சித்தன் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். இல்லையானால் மட்கலத்தைச் செய்வதற்குப் பயன்படும் ஊசி என்னும் கருவி அந்த மட்கலத்தையே சக்கரத்தில் இருந்து வெட்டி எடுப்பதற்கும் பயன்படுவது போன்று, உட்பகைவர் அவன் உள்ளத் தளர்ச்சியோடு இருக்கும் காலம் பார்த்து அவனைத் தப்பாமல் ஒழித்து விடுவர்.

உலைவிடம்-தளர்ச்சி அடைந்த சமயம்; இஃது உள்ளத் தளர்ச்சி, உடல் தளர்ச்சி இரண்டுக்கும் பொருந்தும்; மட்பகை- மட்கலத்தைச் சக்கரத்திலிருந்து வெட்டி எடுக்கப் பயன்படும் ஊசி என்னும் கருவி: மண்ணைப் பகும் கருவி ஆதலின் மட்பகை எனப்பட்டது. அந்தக் கருவி பிறர் அறியாத நிலையில் அந்தக் குடத்தைச் சக்கரத்திலிருந்து பெயர்த்து எடுக்கப் பயன்படுதல் நோக்கி உட்பகைக்கு வள்ளுவர் உவமையாக்கினார். 883

4.மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவும் தரும்.

சிறந்த மனப் பான்மையில்லாத உட்பகைவர் ஒருவனுக்கு ஏற்படுவாரானால், அவன் சுற்றத்தார் அவனோடு சேராமைக்குரிய குற்றங்கள் பலவற்றையும் அவர் விளைவிப்பார். 884

5.உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

வெளிக்குச் சுற்றத்தார் போன்று காட்டிக் கொண்டு உள்ளத்தில் பகைமைக் குணத்துடன் இருப்பார்களானால், அந்தப் பகைமை ஒருவனுக்கு, அவன் இறந்து படுவதற்குக் காரணமான குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.

உறல் முறை-உறவு முறை, சுற்றம்; இறல் முறை இறப்பதற்குக் காரணமானவை. 885