பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உட்பகை

239



6.ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

ஒருவனுக்கு அவனுடைய உறவின் முறை போல் ஒன்றுபட்டு இருப்போரிடமே உட்பகை தோன்றுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

ஒன்றாமை-ஒன்று சேராமை, பகைமை; ஒன்றியார்-ஒன்று சேர்ந்திருப்போர் சுற்றத்தார்; பொன்றாமை-அழிந்து போகாமை, இறவாமை; ஒன்றல்-தங்கியிருத்தல்; பொன்றாமை ஒன்றல்- இறவாமல் உலகில் தங்கியிருத்தல். 886

7.செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.

செப்பும், அதன் மூடியும் பார்ப்பதற்கு ஒன்று சேர்ந்து இருப்பன போல, உட்பகையுள்ளவர்கள் ஒரு குடும்பத்தில் கூடியிருந்தாலும் அந்தச் செப்பும், மூடியும் வேறு வேறாக இருப்பது போல், அந்த உட்பகை கொண்டவர்களும் உள்ளத்தால் கூடியிருக்க மாட்டார்கள்; பிரிந்தே இருப்பார்கள்.

செப்பு-செம்பு என்னும் உலோகத்தால் ஆகிய சிமிழ்; புணர்ச்சி- சேர்ந்திருக்கும் தன்மை; குடி-குடும்பம். 887

8.அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.

உட்பகையால் பீடிக்கப் பெற்ற குடும்பமானது அரத்தினால் தேய்க்கப்பட்ட இரும்பு போன்று அதன் வலிமை குறைக்கப் பட்டுத் தேய்ந்து போகும். 888

9.எட்பகவு அன்ன சிறுமைத்தே யாயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.

உட்பகையானது எள்ளின் பிளவு போன்று மிகச் சிறியதாக இருந்தாலும், அஃது ஒரு குடியை அழிக்க வல்ல தன்மையை உடையதாகும்.

எட்பகவு-(எள்+பகவு) எள்ளின் பிளவு. 889