பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



522

திருக்குறள்

1303. அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்

என்பது, பரத்தைய ரிடத்தினின்றும் வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது:

தம்மைச் சேராமல் வாடி யிருக்கிற ஸ்திரீகளைப் பிணக்கு நீக்கக் கூடாமல் புருஷர்கள் செல்லுதல் முன்னே துக்கப்பட்டுக் கெட்டவர்களைப் பின்னையும் வெகு துக்கங்களைச் செய்வித்தாற் போலும் என்றவாறு.

1304. ஊடி யவரை யுணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று

என்பது இதுவுமது

பிணங்கி யிருக்கிற பரத்தையரைப் பிணக்குத் தீர்த்துக் கலவி செய்யாதொழிதல், தண்ணிரில்லாமல் வாடுகிற கொடியை வேரறுத்த தோடொக்கும் என்றவாறு.

1305. நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை

பூவன்ன கண்ணா ரகத்து

என்பது, தலைமகளைப் பிணக்கு நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது:

நற்குணங்களையே யுடைய தலைவர்க்கும் அழகாவது, பூவைப் போன்ற கண்களையுடைய நாயகிகளின் நெஞ்சிலே உண்டாகிற பிணக்கு மிகுதியன்றே என்றவாறு.

1306. துணியும் புலவியு மில்லாயிற் காமம்

கனியுங் கருக்காயு மற்று

என்பது இதுவுமது

முதிர்ந்த பிணக்காகிய கோபமும் இளைய பிணக்காகிய புலவியும் இல்லாவிட்டால், காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும் என்றவாறு.