பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


எனப்பாடிய இப்பாடலில். சேரலாதனாகிய வேந்தன் தன்பாலுள்ள உணவுப் பொருள்களை யெல்லாம் ஒரு சேரத் தொகுத்துப் பசியால் வருத்தமுற்ற பலர்க்கும் பகுத்தளித்தலால் பசிப்பிணியை அகற்றிய போண்மை படைத்தவன் என்பதனையும், இவ்வாறு பகுத்துண்ணலாகிய இவ்வறத்தால் தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெருமகனாகிய இவன் உலகில் வாழும் செல்வமுடையா ரெல்லாருள்ளும் சிறந்த புகமுடையானாகத திகழ்கின்றான் என்பதனையும் விரித்துக் கூறியுள்ளார்.

'வறியோர்க்குப் பகுத்துண்ணுதலாகிய அறச்செயல்' மன்னர்கள் முதலிய பெருஞ் செல்வர்களால் மட்டுமின்றி ஏழை எளிய மக்களாலும் நாளும் மேற்கொள்ளுதற்குரிய எளிமை யுடையதே என்பதனை,

'யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி'

(திருமந்திரம் 252)

எனத் திருமூல நாயனார் அருளிய திருமந்திரத் தொடரால் நன்கு உணரலாம்.

திருஞானசம்பந்தப் பிள்ளையாரும், திருநாவுக்கரசரும் அடியார் திருக்கூட்டத்தோடும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த போது பெரும்பஞ்சம் உண்டாயிற்று. அப்போது வீழிமிழலைப் பெருமான் அவ்விருவர் கனவிலும் தோன்றி, இப்போது எற்பட்டுள்ள பஞ்சத்தால் உங்கள் பசிகருதிச் சிறிதும் மனவருத்தம் அடைய மாட்டீர்களாயினும் உங்களை வழிபட்டு வரும் அடியார்கள் கூட்டத்தின் பசிநோயை அகற்றுதல் வேண்டி நாள்தோறும் உங்கள் இருவர்க்கும் படிக்காசு அளிக்கின்றோம் எனக் கூறியருளி அவ்விருவர்க்கும் நாள் தோறும் படிக்காசு அளித்தருளினன் என்பதும், நாளும்