பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


படிக்காசு பெற்ற அவ்விருவரும் அக்காசினைக் கொண்டு உணவுப் பொருள் வாங்கித் தங்கள் திருமடத்தில் அடியார் அனைவர்க்கும் பகலுமிரவுமாகிய இருபொழுதிலும் பசிதீரத் திருவமுது படைத்தனர் என்பதும் திருத்தொண்டர் புராணத்திற் கூறப்படும் வரலாற்று நிகழ்ச்சியாகும்.

அல்லார் கண்டத் தண்டர்பிரான்
அருளாற் பெற்ற படிக்காசு
பல்லா றியன்ற வளம்பெருகப்
பரமனடியார் ஆனார்கள்;
எல்லாம் எய்தி உண்கவென
இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்
சொல்லாற் சாற்றிச் சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத் திட்டார்.

(பெரிய - திருநாவுக்கரசர் 259)

எனவரும் சேக்கிழார் வாய்மொழி, பொருட்சார்பு பெறாத அடியார்களின் பசித் துன்பத்தினை இறைவனது அருட்சார்பினால் நீக்கியருளிய சம்பந்தர் திருநாவுக்கரசராகிய பெருமக்கள் இருவரது தொண்டின் திறத்தினை விரித்துரைத்தல் காணலாம்.

பிற உயிர்கள் படும் துன்பத்தினைக் கண்டால் அறிவுடைய நன்மக்கள் உள்ளத்திலே இரக்கவுணர்வு தன்னியல்பில் தோன்றுவதாகும். இத்தகைய இரக்கங் காரணமாகப் பிற உயிர்களின் துயரங்களைப் போக்குதற்கு முற்பட்டு முயலும் அருளாளர்களின் கருணைத்திறம் கொல்லாமை, புலாலுண்ணாமை ஏழைகளின் பசி தீர்த்தல் என்னும் இம்மூவகை அறங்களினும் படர்ந்து செயற்படுவதாகும்.