பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


வாழ்வியல் நூலாகிய திருக்குறளை அருளிச் செய்த தெய்வப்புலமைத் திருவள்ளுவனார், புலால்மறுத்தல், கொல்லாமை என்னும் அதிகாரங்களில், இவ்விரு பேரறங்களையும் அருளாளராகிய சான்றோர்க்கு உயிரினும் சிறந்தனவாக வற்புறுத்தியுள்ளமை இங்குச்சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

கொலைத் தொழிலின் காரியமாகவும், மீண்டும் அதனைத் தூண்டுதலால் கொலைகளுக்குக் காரணமாகவும் அமைந்தது, ஊன் உண்ணுதலாகிய தீவினை. இத்தகைய பாவச்செயல் அருட்குணமுடையார்க்கு எவ்வாற்றானும் பொருந்தாது என்பதனை அறிவுறுத்துவதே திருக்குறளில் உள்ள “புலால் மறுத்தல்” என்னும் அதிகாரமாகும். புலால் மறுத்தல் - ஊன் உண்ணுதலை ஒழித்தல் (புலால்-ஊன்). மக்களது உடம்பு நெல், கோதுமை முதலிய தானியங்கள், இலை, பூ, காய்கனிகள் ஆகியவற்றை உணவாகக் கொண்டே உரிய அளவில் வளர்தற்குரியதாகும். இயல்பாகக் கிடைக்கும் இத்தாவர வுணவுகளைக் கொண்டே மனிதன் தன் உடம்பை நன் முறையில் வளர்த்துக் கொள்ள முடியும். உடல் வளர்ச்சிக்குப் போதுமான இவ்வுணவுகள் இருக்கவும் பிறிதோர் உயிரைக் கொன்று அதன் ஊனினை உணவாகக் கொள்ள விரும்புவது அதன் மேலும் தன் உடம்பினை வீங்கச் செய்தலாகும் எனவும், இவ்வாறு தன் உடம்பைப் பெருக்கப் பிறிதோர் உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்பவன் 'அருள்' என்னும் பண்பினைப் பெறுதல் இயலாது எனவும், புலாலுண்ணுதலைக் கண்டு இரங்கும் நிலையில் அமைந்தது,

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிதுான் உண்பான்
எங்ஙணம் ஆளும் அருள்.

எனவரும் திருக்குறள் ஆகும்.