பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150


வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
பெம்மான்என் றடிகுறித்துப் பாடும் வகைபுரிந்த
பெருமானே நான் செய்த பெருந்தவமெய்ப் பயனே

(4165)

எனவரும் அவர்தம் வாய்மொழிகளால் இனிதுவிளங்கும்.

அருட்பிரகாச வள்ளலார் சங்க நூல்கள், திருக்குறள், நாலடியார் முதலிய நீதி நூல்கள், பன்னிரு திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், திருவிளையாடல், திருப்புகழ், கந்தரநுபூதி, துறைமங்கலம் சிவப்பிரகாசர் நூல்கள், பட்டினத்தார் தாயுமானார் முதலியோர் அருளியபாடல்கள் ஆகிய செந்தமிழ் நூல்களையும் வேத சிலாகம உபநிடதங்கள் முதலிய வடமொழி நூல்களையும் இறைவன் திருவருளால் தாமே பயின்றுணர்ந்த தவநெறிச் செல்வர் என்பது அவர்கள் அருளிய திருவருட்பாப் பாடல்களில் அவற்றின் சொல்லையும் பொருளையும் கருத்துக்களையும் எடுத்தாண்டுள்ளமையால் நன்கு விளங்கும். கலைமகளைப் போற்றும் பாடலில்,

'சங்கம் வளர்ந்திட வளர்ந்த தமிழ்க்கொடியை' (2427)

எனத் தமிழின் வண்ணமாகப் போற்றியுள்ளார். இத் தொடர்ப் பொருளைச் சிந்திக்குங்கால் பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியத்தில் வள்ளலாருக்குள்ள ஈடுபாடு நன்கு புலனாகும்.

சாதி சமய வேற்றுமையின்றி உலகமக்கள் அனைவரும் அன்பினால் ஒன்றுபட்டு வாழ்தற்குரிய நெறிமுறைகளை வற்புறுத்தும் வாழ்வியல் நூலாகிய திருக்குறளை வள்ளலார் தம் பாடல்களில் பல இடங்களிலும எடுத்தாண்டுள்ளார். நெஞ்சறிவுறுத்தல் என்றபகுதியில்