உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

வெளியிட வேண்டுமென்று முதன் முதலில் அரசுக்கு எடுத்துச் சொல்லி, பின்னர் இந்நாள் வரை, நேரிலும், கடிதங்களின் தொடர்பிலும் வாதம் புரிந்து, இன்றைக்குச் சோதனைகள் பலவற்றிலிருந்து மீண்டும் சாதனை பெற்றிருக்கிறார் செந்தமிழ்ச் செல்வர்; தம்முடைய தனிப் பெரும் வெற்றியின் வழியாகத் தமிழகத்தின் மக்கள் அனைவருக்குமே அமைதியையும், ஆனந்தத்தையும் பெருமையையும் தேடித் தந்திருக்கிறார்.

அஞ்சல் துறையில் புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர் திரு டாக்டர் ப. சுப்பராயன் அவர்களை நாம் இதயம் ஒன்றிய நன்றியுணர்ச்சியுடன் பாராட்டுகின்றோம்; பணிவன்புடன் நன்றி நவில்கின்றோம். தமிழர் ஒருவர் மத்திய அரசியல் அமைச்சர் பதவி ஏற்றவுடன் தமிழகத்திற்கு விளைந்த இம்மூதல் வெற்றியை ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்றென்றும் நினைவிற்கொள்ளும்.

‘பாமுறை தேர் வள்ளுவர் முப்பாலான, ‘திருக் குறளின் அருமை பெருமை அளவிடற்பாலது. உலகத்தின் பிறமொழிகள் பலவற்றிலும் நம் தெய்வத் தமிழ் மறை மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஒன்றே இதன் வெற்றிச் சிறப்புக்கு ஓர் உயரிய எடுத்துக்காட்டு. பொய் உலகில் அவதரித்து, நிலையில்லாத வாழ்வெனும் ஆடுகளத்தில் அங்கம் வகிக்கும் மனித ஜாதிக்கு. இந்தக் குறள் ஒளி காட்டும் ஒரு கைவிளக்கு. அரசியலாருக்குப் படிப்பினை தரும் அற்புதமான பாடப் புத்தகம் தமிழ்ப் பண்பு துலங்கும் மனைகளுக்கு இது ஒரு மனை விளக்கு! “திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைத் தமிழின் மூலமே படிக்கவேண்டு மென்பது என்னுடைய ஆவலாகும்!” என்று அண்ணல் காந்தியடிகள் முன்னர் கூறியிருப்பதை யார் தாம் மறப்பர்?