பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தொல்காப்பிய ஆராய்ச்சி ஐந்திணை என்பது உளமொத்த காதலாகும். உளமொத்த காதல் உருவாகுங்கால் கூடலும், பிரிதலும், ஊடலும், இருத்தலும், இரங்கலும் நிகழக்கூடியனவாம். தலைவனும் தலைவியும் காதலில் பிணைந்து கூடுதலைக் குறிஞ்சி என்றும், கூடிய பின்னர்ப் பிரிதலைப் பாலை என்றும், தலைவன் பிரிந்த காலத்தில் தலைவன் மீது பொருந்தாதனவற்றைச் சார்த்தித் துயர்கொண்டு ஊடி இருத்தலை மருதம் என்றும்,ஊடினாலும் உலகியலை நினைந்து தலைவன் வரும்வரை ஆற்றியிருத்தலை முல்லை என்றும், நாளாக நாளாக ஆற்றாமை மிகுந்து கணவனை நினைந்து இரங்குதலை நெய்தல் என்றும் அழைத்தனர். ஆகவே ஐந்திணை என்பன குறிஞ்சி, பாலை, மருதம், முல்லை, நெய்தல் ஆம். திணை என்பது ஒழுக்கத்தையும், இடத்தையும் உணர்த்தும். ஆதலின் குறிஞ்சி என்பது கூடல் ஒழுக்கத்தையும், மலையும் மலைசார்ந்த இடத்தையும் குறிக்கும். பாலை என்பது பிரிவு ஒழுக்கத்தைக் குறிக்கும். அதற்கெனத் தனி நிலம் இல்லை. எல்லா நிலங்களுக்கும் உரியது. இளங்கோ அடிகள் முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலையாகும் என்றனர். பாலை யொழிந்த ஏனை நான்குமே நிலம் பெற்றிருத்தலின் தமிழர்கள் உலகத்தை நானிலம் (நால் + நிலம்) என்றனர் என்பர். மருதம் ஊடல் ஒழுக்கத்தையும் வயலும் வயல் சார்ந்த இடத்தையும் குறிக்கும். முல்லை இருத்தல் ஒழுக்கத்தையும் காடும் காடு சார்ந்த இடத்தையும் குறிக்கும். நெய்தல் இரங்கல் ஒழுக்கத்தையும் கடலும் கடல் சார்ந்த இடத்தையும் குறிக்கும். 2 குறிஞ்சி, மருதம் முதலிய பெயர்கள் முதலில் மரம் செடி கொடிகளுக்கு உரியனவாயிருந்தன.