பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தெலுங்கின் முதல் இலக்கண நூல், கேதனர் என்பவர் கி.பி 1260 ஆம் ஆண்டில் இயற்றிய 'ஆந்திரபாஷா பூஷணம்’ என்பது. ஆந்திரபாஷா என்பது மொழியின் பெயர் அன்று: ஆந்திரத்தில் உள்ள மொழி என இதற்குப் பொருள் கொள்ள வேண்டுமாம். இந்த நூல், கன்னட மொழியில் உள்ள 'கரு நாடக பாஷா பூஷணம்' என்னும் இலக்கண நூலைத் தழுவியதாம். தெலுங்கின் இறுதி இலக்கண நூல்; பிரவஸ்து சின்னய சூரி' என்பவர் கி.பி. 1260 ஆம் ஆண்டில் இயற்றிய 'பால வியாகரணம்’ என்பது.

தெலுங்கின் முதல் இலக்கிய நூல், நன்னய பட்டர் என்பவர், கி.பி. 1050 ஆம் ஆண்டு, சமசுகிருத மகா பாரத நூலின் மூன்று பருவங்களைத் தெலுங்கில் மொழி பெயர்த்த பாரத நூலாகும். அடுத்த பழைய இலக்கியம், நன்னி சோடர் என்பவர் கி.பி. 1120 ஆம் ஆண்டில் இயற்றிய குமார சம்பவம் என்னும் புராணக் கதை நூலாகும் சமசுகிருதம் கலந்த தெலுங்கு மொழியின் இரங்கத் தக்க நிலை இது.

கன்னடம்:

இது கருநாடக மாநிலத்தில் பேசப்படுவது. இப்போது வழங்கும் கன்னட மொழி அமைப்புக்கு முன் இருந்த அமைப்பு 'பழங்கன்னடம்' எனப்படுகிறது. பழங் கன்னடம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையது. பழங் கன்னடத் தில் எ,ஒ,ழ, ற,ன என்னும் எழுத்துகள் தமிழில் உள்ளாங்கு இருந்தன. புதுக்கன்னடத்தில் 'ற' என்பது 'ர' ஆகவும், ‘ழ’ என்பது "ள’ ஆகவும் ஒலிக்கப்படுகின்றன. கன்னடத்தில் உள்ள முதல் இலக்கண நூல் கவிராஜ மார்க்கம்’ என்பது. இது கி.பி.9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.