உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

இதன் ஆசிரியர் இராட்டிரகூட மன்னரான 'நிருப துங்க' அமோகவர்ஷன் (814 - 877) என்பவர் என்று சிலரும், இவரது அவைக்களப் புலவர் என்று சிலரும் கூறுகின்றனர். நூலின் பெயரும் அரசர் பெயரும் வடமொழியாயிருப்பது காண்க. திராவிட மொழி ஒன்றின் நிலை இது. இந்த வேந்தரே மிகுதியான வடமொழிக்கலப்பைப்பழித்துள்ளார். கன்னட மொழியில் சொற்களின் இறுதியில் மெய்யெழுத்து இராது. தமிழுக்கும் கன்னடத்திற்கும் உள்ள சிறு சிறு ஒலி வேறுபாட்டைப் பிறகு காணலாம்.

மலையாளம்:

தமிழ் நாட்டின் முப்பெரும் பிரிவுகளாகிய சேரநாடு, பாண்டிய நாடு, சோழநாடு என்பவற்றுள் ஒன்றாகிய சேரநாடு என்பதே இப்போதுள்ள கேரள நாடு எனப்படும் மலையாளமாகும். மதம், இனம், அரசியல், பண்பாடு, முதலியவை தொடர்பான வேற்றுக் கலப்பினால், சேர நாட்டிற்கும் மற்ற தமிழ்ப் பகுதிக்கும் இடையேயும், சேரநாட்டுத் தமிழுக்கும் மற்ற பகுதித் தமிழுக்கும் இடையேயும் நாளடைவில் வேற்றுமை தோன்றலாயிற்று. இரு பகுதிகட்கும் இடையே நீண்டு படுத்துக் கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், வேறுபாடு உண்டாக்கியதில் பங்கு உண்டு.

இடத்தின்பெயர் மலையாளம். எனவே, பண்டு சேர நாட்டுத் தமிழ், மலை நாட்டுத் தமிழ்-மலையாளத் தமிழ் -மலையாண்மை என்னும் பெயர்களால் வழங்கப்பட்டது. கி.பி. 14 ஆம் நூற்றாண்டளவில், மலை நாட்டுத் தமிழ் இப்போதுள்ள மலையாளம் ஆயிற்று. வடமொழி எழுத்துகளும் சொற்களும் சேர்க்கப்பட்டன.