பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நினைவு அலைகள் பெருகிக்கொண்டேபோகும் படிப்போர் எண்ணிக்கையைச் சமாளிக்க, கற்பிக்கும் ஆசிரியர், ஆசிரியைகளின் எண்ணிக்கை பெருக வேண்டும். கூடுதல் ஆசிரியர்களின் நியமனத்தில் சிக்கனம் செய்தால், படிப்பு பாழாகும். இனி சேரப்போகிறவர்கள், பெரிதும் முதல் தலைமுறை மாணவர்கள்; மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்குத் தனிக் கவனம் அதிகம் தேவைப்படும். தொடக்க வகுப்புகளில், உச்சரிப்பு, எழுத்து, எண் ஆகியவற்றில் நல்ல பயிற்சி கொடுத்துவிட்டால், மேல் வகுப்புகளில் சிலவேளை, பெரிய வகுப்புகள் இருந்தாலும் சமாளித்துக் கொள்வார்கள். போதிய ஆசிரியர்களைக் கூடுதலாக நியமிப்பதென்றால், தேவையான அளவில், ஆசிரியப் பயிற்சி நிலையங்களைத் திறக்க வேண்டும்; உள்ள பயிற்சி நிலையங்களை விரிவாக்க வேண்டும். 1956-61 வரையிலான, இரண்டாம் அய்ந்தாண்டுத் திட்டத்தில் கீழ் தொடக்க நிலையில் முனைப்பு, அடுத்த அய்ந்தாண்டுத் திட்டத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக் கூடுதல் கவனம், அதற்கப்புறம் ஒன்பது, பத்து வகுப்பு மாணாக்கர்களைப் பெருக்குவது, அதற்கு அடுத்த அய்ந்தாண்டுத் திட்டத்தில் கல்லூரிக் கல்வியை வளர்ப்பது. இப்படிக் குறிக்கோள்களை வைத்துக் கொண்டோம். அவற்றிற்கு இடையில் இயல்பாக நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்போர் எண்ணிக்கை பெருகினால், என்ன செய்வது? இயல்பான வளர்ச்சியைத் தடுக்க வேண்டாமென்ற முடிவுக்கு வந்தோம். சென்ற காலத்தின் சராசரி வளர்ச்சியாவது தொடரும் என்ற மதிப்பீட்டில் அந் நிலைகளுக்கு நிதி ஒதுக்குவதே சரி என்று தோன்றிற்று. மேற்கூறிய அடிப்படைகளை வைத்துக்கொண்டு, இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தைத் தீட்டினோம். ஆசிரியர் மாணவர் விழுக்காடு பழையபடி இருக்கக் கணக்கிட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/171&oldid=787956" இலிருந்து மீள்விக்கப்பட்டது