உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூட ஆண்டு விழா 229 அவர், எங்களை நெடுநேரம் காக்க வைக்கவில்லை. குறிப்பிட்ட நேரம் வந்து சேர்ந்தார். அடிப்படை ஊழியர் ஒருவர் காரின் கதவைத் திறந்தார். முதலமைச்சர் மாண்புமிகு காமராசர் காரை விட்டு இறங்கினார். முதலில் நான் வணங்கினேன். பின்னர் பெருமாள் முதலியாரை அறிமுகம் செய்து வைத்தேன். அவரும் வணங்கினார். பதில் வணக்கம் செய்தபடியே “எப்படிப் போக” என்று கேட்டார். அன்று ஆசிரியர் கல்லூரியின் நூற்றாண்டு விழா, அந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவே, முதலமைச்சர் வருகை புரிந்தார். திறந்த வெளியில் ஒரு புறம் அழகாக அமைக்கப்பட்டிருந்த மேடையை நோக்கி முதலமைச்சரை முதல்வர் அழைத்துச் சென்றார். முதலமைச்சருடன் நான் சென்றேன். இரண்டடி எடுத்து வைத்ததும் காமராசர் என் பக்கம் திரும்பினார். "நீங்கள் சொன்னது பலித்துவிட்டது” என்று என்னிடம் கூறினார். ஒன்றும் புரியாததால் திருதிருவென விழித்தேன். என் திகைப்பை உணர்ந்த முதலமைச்சர் காமராசர், “இன்று மாலை தினத்தந்தி'யை நீங்கள் படிக்கவில்லையா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். “இல்லை” என்றேன். "அப்படியா? நீங்கள் களத்துமேட்டு அளவையில் மூன்றாவது அளவைத் தானியத்தைப் பள்ளிக்கூட அன்னதானத்துக்குக் கொடுக்கும்படி துரத்துக்குடி கூட்டத்தில் சொன்னிர்களாம். "அப் பேச்சை பதிந்து வைத்தார்களாம். அதை நாகலாபுரம் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் போட்டுக் கேட்டார்களாம். அப் பேச்சைக் கேட்ட உள்ளுர்ப் பெரியவர்கள், அப்படியே செய்வதாக, முடிவு எடுத்து, அறிவித்துவிட்டார்கள். 'அவ் வூர்க்காரர்கள், சொன்னதைக் காப்பாற்றுகிறவர்கள். தேவை என்றால் தலையையும் கொடுத்து, வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள். உங்களுக்கு நாகலாபுரம் தெரியுமா?” என்ற கேள்வியோடு முடித்தார் முதலமைச்சர். “சென்னைக்கு வடமேற்கில் உள்ள நாகலாபுரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதைப் பார்த்ததில்லை. வேறு நாகலாபுரம் தெரியாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/268&oldid=788053" இலிருந்து மீள்விக்கப்பட்டது