உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 நினைவு அலைகள் “அவ்வளவு செய்தியையும் சி. சுப்பிரமணியம் என்னிடம் சொல்லியிருக்கிறார். உங்களை அழைத்தால், நானே, பதில் சொல்லக்கூடாதே என்பதற்காக உங்களைக் கேட்கிறேன். நீங்கள் இங்கே இருக்க விரும்புகிறீர்கள் என்று நான் சொல்லி விடுகிறேன்” என்று முடிவு தெரிவித்தார். அப்போது, இமாலயத் தவறு செய்கிறேன் என்பதை நான் உணரவில்லை. 51. பிரிட்டானியப் பயணம் தந்தையார் மறைவு 1962ஆம் ஆண்டு ஒரு வெளிநாட்டு அழைப்பு வந்தது. பிரிட்டன் நாட்டிற்கு வந்து கல்வி நிலையங்களைப் பார்த்துப் போகுமாறு அழைக்கப்பட்டேன். அழைத்தது எந்த அமைப்பு? பிரிட்டிஷ் கெளன்சில் என்ற அமைப்பு. அது தன்னாட்சி உரிமை உடைய நிறுவனம். அலுவல் பற்றற்ற நிலையில், பிற நாடுகளோடு தொடர்புகளை வளர்த்து, நல்லெண்ணத்தைப் பெருக்குவது அதன் நோக்கம். அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் பல நாடுகளில் இயங்கி வருகின்றன. அப் பெருநிறுவனத்தின் அழைப்பை ஏற்றுக் கொள்ள நம் அரசு இசைவு தந்தது. பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை முறைப்படி செய்துகொண்டிருந்தேன். அப்போது ஒரிடி வீழ்ந்தது. 14-9-1962 காலை அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருந்தேன். வாலாஜாபாத்திலிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது. எங்கள் ஊரில் - நெய்யாடிவாக்கத்தில் - என் தந்தை திடீரென மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்று அச் செய்தி தெரிவித்தது. உடனே, சென்னையிலிருந்த என் தம்பிகள் இருவரோடும் தொடர்பு கொண்டேன். என் மனைவியையும் அவர்களையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு விரைந்தேன். மீளாத்துயில் கொண்டிருந்த தந்தை-திரு. நெ. ச. துரைசாமிக்கு அஞ்சலி செலுத்தினோம். எங்களுக்கு முன், உறவினர்களும் நண்பர்களும் கூடியிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/543&oldid=788356" இலிருந்து மீள்விக்கப்பட்டது